rபொள்ளாச்சி பயங்கரம்: மீட்சிக்கான வழி என்ன?

Published On:

| By Balaji

லக்‌ஷ்மி

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் வன்புணர்வு நான்காவது இடம் பெறுகின்றது.

வன்புணர்விற்குத் தூக்குத் தண்டனை தருவதிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் இருந்தாலும் குற்றங்கள் குறையவில்லை.

தண்டனைச் சட்டம் வலுவாக இருந்தாலும் குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்:

1) ஆண் பெண் இருபாலருக்கும் செக்ஸ் பற்றிய போதிய அறிதலும் புரிதலும் இல்லாமை.

இன்றைய தலைமுறையினர் பலர் பார்ன் வீடியோக்களில் காட்டப்படுவதே உண்மை என்று நம்புகிறார்கள். தொடர்ந்து அவற்றைப் பார்க்கும்பொழுது இன்னும் இன்னும் என்று அதற்கான தேடல்கள் அதிகரித்து voyeurism, monster sex, group sex, என்று வீடியோ தளத்தில் தேடல்கள் அதிகரித்து கடைசியில் பெண்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் வீடியோக்களில் ஈடுபாடு கொள்கிறார்கள்.

இந்த ஈடுபாடு பிற்பாடு அந்த வக்கிரங்களைச் செய்யத் தூண்டுகிறது. சாதாரணமான மனிதன் குரூர மனம் கொண்டவனாக மாற்றம் அடைகிறான்.

வீடியோக்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்றால் அது அத்தனை எளிது இல்லை. காலங்காலமாக மக்களின் மனம் காமத்தில் ஊறிக் கிடக்கிறது. இது போன்ற வெப்சைட்களை ஒழிப்பதும் அத்தனை சுலபமுமில்லை. இந்த உடற்சந்தையில் பெருகும் வருமானம் சாதாரணமாக உழைத்துப் பெறுவதைவிடப் பல மடங்கு லாபம் ஈட்டும் தொழில்.

வருமானத்தை மையமிட்டே துவங்கப்பட்ட வெப்சைட்களும் இது போன்ற குரூர வீடியோக்களும் எடுக்கப்படாமலும், வெளியிடப்படாமலும் முழுவதுமாகத் தடுத்தல் அத்தனை சாத்தியமில்லை. டாஸ்மாக்கைவிட அதிகச் செல்வம் கொழிப்பது இது போன்ற வெப்சைட்களில். எனினும் லட்சக்கணக்கான கொடூர வீடியோக்களை அழித்தே ஆக வேண்டும்.

2) பத்து வருடத்திற்கு முன்பு இருந்த தொழில்நுட்பங்கள் வெகு சாதாரணமானவை. தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் பெருகியதும் இது போன்ற குற்றங்களுக்கு வித்திடுகின்றன. சில தொழில்நுட்பங்கள் நன்மையைவிடத் தீமைக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

சமூக வலைதளம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. பயன்படுத்தத் தெரியாதவர்களிடமும், வக்கிர மனம் கொண்டவர்களிடமும், கிரிமினல் மூளைக்காரர்களிடம் செல்லும்போது அது அபாயகரமான ஆயுதமாக மாறிவிடக்கூடும்.

சமூக வலைதங்களை முடக்கிவிடலாமா என்றால் அது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் கதைக்கு ஒப்பாகும். தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

**எது சுதந்திரம்?**

3) எது சுதந்திரம் என்ற கேள்விக்குத் தற்காலப் பெண்களிடம் சரியான, தெளிவான பதிலில்லை. உண்மையில் சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்று பெண்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட பெண்கள் எப்படி இப்படி அறியாமையில் சிக்கிக்கொண்டனர் என்று மலைப்பாய் இருக்கிறது.

சமூக வலைதளத்தில் ஒருவனை விரும்பியோ அல்லது நம்பியோ காதல் / காம வயப்படுகிறார்கள். பின்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய அந்தரங்கப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பின் ஒரு சந்தர்ப்பத்தில் உடலைப் பகிர்கிறார்கள். அது வீடியோ எடுக்கப்பட்டு அதை வைத்து மிரட்டப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கும், பணம் பறித்தலுக்கும் ஆளாகிறார்கள்.

அறியாமையாலும், சமூகம் பெண்ணின் உடலில் திணித்து வைத்திருக்கும் ஒட்டுமொத்த ஒழுக்கக் கலாச்சாரத்திற்கு பயந்தும், தனக்கு நடக்கும் கொடுமைகளைப் பெண்கள் வெளியே சொல்ல தயங்கி இருக்கலாம். தவறுக்கு இணங்கும்போது உள்ள அதே துணிச்சல் ஏதாவது ஒரு இடத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் வந்திருக்க வேண்டும்.

அய்யோ… இந்தப் புகைப்படம் அல்லது வீடியோ வெளிவந்தால் என்னாவது என்ற பயமே மீண்டும் மீண்டும் தவறான பாதையில் நெடுந்தூரம் அவர்களைப் பயணிக்கச் செய்துவிடுகிறது.

பெண்களுக்குப் பொதுவாகவே ஒரு உள்ளுணர்வு சொல்லும். இது தவறு, வேண்டாம் என்ற உள்ளுணர்வு . முதலில் அதை மதிக்கக் கற்றுக்கொண்டாலே பெரும்பாலான பிரச்சினைகளைத் தடுத்துவிடலாம்.

**சட்டத்தை நாடத் தயக்கம் ஏன்?**

மீறி நடந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தைரியமாக சட்டத்தை நாடும் அளவு சட்டம் அத்தனை எளிதாக இல்லை. நான் இவனால் வன்புணர்வு செய்யப்பட்டேன், குதறி எறியப் பட்டேன் என்றால் அதற்குப் பிரதிபலனாக அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் அவமானங்கள், துர்வார்த்தைகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேட்கப்படும் சொல்லக் கூசும் விளக்கங்கள்… இதுதான் சட்டத்தை நாடுவதற்குத் தயக்கம் காட்டச் செய்கிறது.

வன்புணர்வு விசாரணைகளுக்காகப் பெண்களுக்காக பெண்கள் மட்டுமே இயங்கும் காவல்நிலையங்கள் நிறைய துவங்கப்பட வேண்டும். அந்தப் பெண் காவலர்களுக்கும் இதை விசாரிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகத்திலும் காட்ட வேண்டிய நுண்ணுணர்விலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4). பெண் உயிர் போகும் நிலை என்று வந்தால் மட்டுமே இங்கு சட்டங்களும் சமூகமும் திரும்பிப் பார்க்கின்றன.

இருபது வருடத்திற்கு முன்பு சமூகம் இத்தனை பாதுகாப்பற்றதாக இல்லை. வயதான பாட்டி, தாத்தாக்கள் திண்ணையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பார்கள். தற்போதுள்ள மூத்த தலைமுறை தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் சீரியல்களில் மூழ்கி வருங்காலச் சந்ததியினருக்கு வழி தெரியாமல் செய்துகொண்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறையினரோ வேலை, பணம் சம்பாதித்தல், சமூக வலைதளங்கள், சுய தேவைகள் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளை டே கேரிலோ, டியுஷனிலோ, சம்மர் கேம்பிலோ விட்டுவிட்டு, எப்படி வாழ வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டியதை மறந்து, திசை அறியாமல் அலைந்துகொண்டிருக்கிறோம்.

தற்போதைய சமூகம் விழித்துக்கொள்ளாமல் போனால்

வருங்காலம் இன்னும் மோசமான சமூகமாக உருவாகிப் பல தலைமுறையினரை அழிக்கும்.

5) பெண் உடல் என்பது அவளுக்கானதல்ல; அவள் ஆணின் உடைமை. ஆண்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டவள் என்ற எண்ணம் இருக்கும் வரை உடலைப் பிரதானமாக வைத்து நடத்தப்படும் உடற்சந்தை மென்மேலும் வளர்ந்து பூமியைச் சுடுகாடாக மாற்றவல்லது. பெண்கள் வெறும் உடைமைகள் அல்ல. உயிரும் உடலுமாய் இருக்கும் அவளை சக மனுஷியாக, சமத்துவத்தோடு நடத்த வேண்டிய அவசியத்தை இனியாவது உணருங்கள்.

6) உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும், ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வித்தியாசத்தில் ஏற்படும் சிக்கல்கள் பல சமுதாயங்களை அழிக்கக்கூடும்.

பெண் பிள்ளையை வளர்ப்பதற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ , அதே முக்கியத்துவத்தை ஆண் பிள்ளையை வளர்ப்பதற்கும் தந்தாக வேண்டும். பெண்ணைச் சக உயிரினமாக மதித்து சம அளவில் நடத்திச் செல்ல ஒரு தாயாக, தந்தையாக, இன்ன பிற உறவுகளாக நீங்கள் வரும் சமுதாயத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த சந்ததியினர் செம்மையான வாழ்வும், அமைதியும், சந்தோஷமும் அமையும்.

அதை விடுத்து, “இதுக்குதான் நாங்க உங்களை அடங்கி இருக்கச் சொன்னோம்” என்று ஆணாதிக்கவாதத்தைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள். மொத்த வன்புணர்வு பிரச்சினைகளுக்கும் ஆண் என்ற சமூக விலங்குதான் காரணம்.

7) ஆணோ, பெண்ணோ சம்பாதித்து, உண்டு, உயிரோடு இருப்பது எதற்காக. சந்தோஷமாக இருப்பதற்காகத்தானே. குடும்பத்தில் என்ன நடக்கிறது என்றே அறியாமல் கணவனும் மனைவியும் ஓடி ஓடி உழைத்து, பணத்தைப் பெருக்கி என்ன லாபம் கண்டுவிடப்போகிறோம்?

உங்கள் நேரத்தை குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சற்று செலவிடுங்கள். ஒவ்வொருவரும் தனது நேரத்தைக் குடும்பத்தினருடன் சரிவரப் பகிர்ந்துகொள்ளாமல் போனால் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் பிரளயம் வெடிக்கும்.

இணைந்து இயைந்து வாழ்ந்து, புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.

(கட்டுரையாளர் **லக்‌ஷ்மி** ஃபேஸ்புக்கில் சமூகம் சார்ந்து தீவிரமாக எழுதி வருபவர்)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share