Rபேரிடர் பயிற்சியில் மாணவி பலி!

Published On:

| By Balaji

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

கோவை நரசீபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் என்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி நேற்று (ஜூலை 12) தொடங்கியது. இந்தப் பயிற்சியில் பேரிடர் காலங்களில் செயல்படுவது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் தலைமையிலான மூன்று பேர் பயிற்சி அளித்தனர்.

இதன்படி நேற்று மாலை 4 மணி அளவில் கட்டடத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் பயிற்சியை ஆறுமுகம் மாணவர்களுக்கு வழங்கினார். கல்லூரி வளாகத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் மேலிருந்து ஒவ்வொருவராகக் கீழே குதிக்க, 20 பேர் கீழே நின்று வலையில் அவர்களை பிடித்துக் கொண்டனர். கல்லூரியில் பிபிஏ இரண்டாவது ஆண்டு படிக்கும் 19 வயதான மாணவி லோகேஸ்வரியும் இந்தப் பயிற்சியில் பங்கெடுத்தார். மாணவி லோகேஸ்வரி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதிக்க பயந்தார். இதனால் பயிற்சியாளர் அவருக்குத் தைரியம் அளித்து கீழே குதிக்க சொன்னார். இருப்பினும் மாணவி லோகேஸ்வரி தயங்கிக் கொண்டே இருந்தார். திடீரென மாணவியைப் பயிற்சியாளர் கீழே தள்ளிவிட, மாணவி லோகேஸ்வரியோ முதல் தளத்தில் உள்ள சன் ஷேடில் தலைகீழாக விழுந்து, அங்கிருந்து வலைக்குள் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு, தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கான சேர்த்தனர். இருப்பினும் அதிகளவில் ரத்த இழப்பு ஏற்பட்டு லோகேஸ்வரி உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், லோகேஸ்வரி வழியிலேயே உயிரிழந்துவிட்டார். தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ஆறுமுகம் விசாரணைக்காக ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பயிற்சி அளித்ததும், மாணவியைக் கட்டாயப்படுத்தி கீழே தள்ளிவிட்டதும், அதனால் மாணவி உயிரிழந்துள்ளதும் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கீழே குதிக்கத் தயங்குவதும், பயிற்சியாளர் மாணவியைத் தள்ளி விடுவதும் கீழே நின்ற மாணவர்கள் தங்களது கைப்பேசியில் எடுத்த காணொளிக் காட்சியில் பதிவாகியுள்ளது. இந்தக் [காணொளிக் காட்சி](https://www.youtube.com/watch?v=NUji7PrREF8) சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மாணவி லோகேஸ்வரி நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லாகவுண்டர் என்பவரின் மகளாவார். லோகேஸ்வரியின் எதிர்பாராத மரணத்தினால் அவரது குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share