டெல்லியில் இளம்பெண் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், அப்பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறி அசோக் குமார் தோமர் என்பவர் டெல்லி காவல் துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது மகன் அப்பெண்ணைத் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ தான், கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கடுமையாகத் தாக்கிய வீடியோ வெளியானது. இது வைரலாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இது குறித்து டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த நபரின் பெயர் ரோஹித் சிங் தோமர் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் மீது டெல்லி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோஹித்தின் தந்தை அசோக்குமார் தோமர் டெல்லி மத்திய மாவட்டத்திலுள்ள காவல் நிலையமொன்றில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியதே இதற்குக் காரணம்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 14) இந்த வீடியோ மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, ரோஹித்தைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி அலி ஹசனில் ரோஹித் நடத்திவந்த கால் சென்டரில் தான் அப்பெண் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அவ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பெண்ணைத் தாக்கிய ரோஹித் மற்றும் அக்காட்சியைச் செல்போனில் பதிவு செய்த ராஜேஷ் என்ற ஊழியரைக் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர், தன்னைக் கற்பழித்ததாகவும், அதன்பின் தாக்கியதாகவும் சம்பந்தப்பட்ட பெண் ரோஹித் மீது புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில், ரோஹித்தின் தந்தை அசோக் குமார் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அவர் டெல்லி காவல் துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு, இன்று வெளியாகியுள்ளது.�,