நிதி அதிகாரம் கொண்ட பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரணாக விளங்குவதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் மொபைல் ஆப் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 12) கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “ மகளிர் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் உறுதி, கூட்டு முயற்சி மற்றும் தொழில்முனைவுக்கு சிறந்த உதாரணமாக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளை பெண்கள் இல்லாமல் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
மகளிர் சுய உதவிக் குழுக்களால், இன்று பெண் தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர். பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏழைகள் குறிப்பாக கிராமப்புற பெண்கள் முன்னேற சுய உதவிக்குழுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கடந்த 2011 முதல் 2014 வரை வெறும் 5 லட்சம் சுய உதவிக் குழுக்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பின் 20 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன
தற்போது 45 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ள பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாக விளங்குகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும் இளைய தலைமுறையினர் மத்தியில் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்துவதாகவும், இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் சொந்தக் காலில் நிற்பதற்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபெரென்ஸிங் மூலம் கலந்துரையாடுவது இது ஒன்பதாவது முறையாகும். ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.�,