புத்தாண்டின் முதல் நாளான நேற்று நகை விற்பனை 2015 புத்தாண்டைவிட 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக நகை வாங்கும் நடவடிக்கை 80சதவிகிதம் உயர்ந்துள்ளது.
2016ஆம் வருடம் முடிந்து நேற்று புதிய வருடம் பிறந்துள்ளது. விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமையில் புத்தாண்டு பிறந்ததால் பெரும்பாலானோர் நகைக்கடைகளுக்குச் சென்று நகைகளை வாங்கிச் சென்றனர். பணத்தட்டுப்பாடு காணப்பட்டாலும் மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக நகைகளை வாங்கினர். 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் தேதியில் நடந்த நகை விற்பனையைவிட 2017ஆம் ஆண்டின் முதல் நாளில் (நேற்று) நகை விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆண்டின் முதல் நாளில் நகைகள் வாங்கும்போது அந்த ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் நகைக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையைப் பொருத்தவரையில், தி.நகர், மைலாப்பூர், பிராட்வே, புரசைவாக்கம், தாம்பரம்,அடையாறு, கேத்தெட்ரல் சாலை, பெரும்பூர், போரூர் உள்ளிட்ட நகரங்களில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிடக் கூடுதலாக இருந்தது. இதுபற்றி தங்கம் மற்றும் ரத்தினங்கள் வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலையிலிருந்தே நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் கூடுதலான அளவில் நகை விற்பனை நடந்துள்ளது. அதேபோல, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக நகை வாங்கும் நடவடிக்கை 80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது’ என்றார்.�,