Rபயோ பிக்கும் தமிழ் சினிமாவும்!

Published On:

| By Balaji

இராமானுஜம்

இந்திய சினிமாவில் குறிப்பாக இந்தியில் பிறர் வரலாறுகளைத் திரைப்படமாக்கும் போக்கு வளர்ந்துவருகிறது. கன்னடம், மலையாள மொழிகளில் இது இன்னும் தொடங்கப்படவில்லை.

தெலுங்கு மொழியில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜசேகர ரெட்டியாக நடிக்கத் தெலுங்கு நடிகர்கள் விருப்பம் தெரிவிக்காததால் மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ளார்.

தெலுங்கில் தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்படுகிறபோது வணிக லாப நோக்கம் கடந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரமாண்டமான செலவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கு அங்கு உள்ள அரசியல்வாதிகள் ஆதரவும் ஒத்துழைப்பும் தருகின்றனர். இதனாலேயே திரைப்பட நடிகராக இருந்து முதல்வர் பதவிக்கு உயர்ந்த என்.டி.ராமாராவ் வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் அப்படியோர் ஆதரவு இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. பயோ பிக் மோகம் தமிழ் சினிமாவில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாகப் போராடியவர்களில் பெரியார், காமராஜர் இவர்களின் வாழ்க்கை திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதே போன்று சுதந்திரப் போராட்ட கவிஞர் பாரதியார், கணித மேதை ராமானுஜர் இருவரது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு படங்களும் தயாரிக்கப்பட்டதற்கு முயற்சி எடுத்தது ஞானராஜசேகரன், (பாரதி, பெரியார், ராமானுஜர் படங்களின் இயக்குநர்) பாலகிருஷ்ணன் (காமராஜ் பட இயக்குநர்).

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் தமிழகத்தை ஆட்சி புரிந்த முதல்வர்கள் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.

சினிமா மூலம் பிரபலமாகி ஆட்சியைக் கைப்பற்ற திரைப்படத் துறையை பயன்படுத்தியவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த மொழிப்போர் தியாகிகளை பற்றி ஒரு ஆவணப்படத்தைக்கூடத் தயாரிக்கவில்லை.

சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தில் உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் பற்றித் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை.

ஆனால், ஜெயலலிதா பற்றித் திரைப்படம் எடுக்க மூன்று பேர் போட்டி போடுகின்றனர். அவரது அரசியல் குருநாதர் எம்ஜிஆர் பற்றிய திரைப்படம் தயாரிக்க நிதிப் பற்றாக்குறை இருப்பதால் தயாரிப்பு வேலைகள் தாமதமாகிறது.

தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை எவ்வித சமரசமும் இன்றி தமிழகத்தில் தயாரிக்க முடியாது என்பதை மணிரத்னம் தயாரித்து இயக்கிய இருவர் படம் சந்தித்த தடைகள், பிரச்சினைகள் மூலம் அறியலாம்.

ஜெயலலிதா வாழ்க்கையை நேர்மையாகப் பதிவு செய்ய முடியாது எனத் தெரிந்தே மூன்று நிறுவனங்கள் போட்டி போடுவது ஏன்?

சமகால அரசியல், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூகப் போராளிகள் பற்றிய வாழ்க்கைப் பதிவுகளைத் தயாரிக்காமல் தவிர்த்தது ஏன்?

வியாழக்கிழமை பார்க்கலாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share