4
பிப்ரவரி மாதம் பயணிகள் வாகனப் பிரிவில் சில்லறை விற்பனையில் 8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
சில்லறை விற்பனைச் சந்தையில் வாகன விற்பனை குறித்த விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,15,276 பயணிகள் வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த 2,34,632 வாகனங்களை விட இந்த எண்ணிக்கை 8 சதவிகிதம் குறைவாகும். ஆண்டு இறுதியில் இருப்பில் இருந்த வாகனங்களை விற்றுத் தீர்க்கும் முயற்சியால் ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை சிறப்பாக இருந்ததாகவும், பிப்ரவரி மாதத்தில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவரான ஆசிஷ் ஹர்ஷராஜ் காலே *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகன விற்பனையிலும் 7.97 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 11,25,405 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018 பிப்ரவரியில் மொத்தம் 12,22,883 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அனைத்து பிரிவுகளும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 14,52,078 வாகனங்கள் பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 8.06 சதவிகிதம் சரிவாகும். செப்டம்பர் மாதத்தில் வாகனக் காப்பீடு உயர்த்தப்பட்டதிலிருந்து அடுத்த சில மாதங்களாகவே வாகன விற்பனையில் மந்தநிலை நீடிப்பதாக ஆசிஷ் ஹர்ஷராஜ் காலே தெரிவித்துள்ளார்.�,