“பணமதிப்பழிப்பு கொண்டு வந்தது மாபெரும் பிழை. அதன் நோக்கங்கள் நிறைவேறவில்லை” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் வரும் 28ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜக கடுமையாக முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை அகற்றும் நோக்கோடு காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று (நவம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “48 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மத்திய பிரதேசத்தில் 90 ஆயிரம் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாளை கொண்டாடும் முன்பே இறந்துள்ளனர். ஆதிவாசி சகோதர, சகோதரிகள் துயரத்தில் சிக்கியுள்ளனர். 3,63,424 ஆதிவாசிகளின் பட்டா கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் நமது நாடு பல நெருக்கடி தருணங்களை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையை விமர்சித்த அவர், “மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை சரி என்று நிரூபிப்பதற்காக நேரத்திற்கு நேரம் புதிய வாதங்களைக் கொண்ட கதையாடல்களை கட்டமைக்கின்றனர். ஆனால் பணமதிப்பழிப்பு கொண்டுவந்தது மாபெரும் பிழையாகும். இதன் நோக்கங்கள் ஒன்றுகூட நிறைவேறவில்லை” என்று குறிப்பிட்டார்.
எம்.பி.ஏ, எல்.எல்.பி. பி.ஹெச்டி படித்த 2,81,000 இளைஞர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். இது ஒன்றே மத்திய பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையின் தீவிரத்தைக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டிய மன்மோகன் சிங், சராசரியாக ஒரு வருடத்திற்கு 17 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுவதாகவும், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையால் அதிக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது எனவும் வேதனையுடன் கூறினார்.
“நாடாளுமன்றம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மை எவ்வாறு சீரழிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்த்துவருகிறோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை கவனமுடன் செய்துவருகின்றனர்” என்று தனது பேட்டியில் தெரிவித்த மன்மோகன் சிங், பிரதமர் மோடி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.�,