�
ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு காயம் ஏற்பட்டதால் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டார். இப்போட்டியில் சாய்னா கண்டிப்பாக பட்டத்தை வென்றுவிடுவார் என்று நோக்காளர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான ஹீ பிங்ஜாவை எதிர்த்து சாய்னா போட்டியிட்டார். இதில் சாய்னா 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் சாய்னா வெற்றி பெற்றதையடுத்து இறுதிச்சுற்றில் ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான கரோலினா மரினை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இரு பக்கமும் போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தது. தொடக்கம் முதலாகவே நேர்த்தியாக விளையாடிய கரோலினா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் கழித்து விளையாடத் தொடங்கினார். ஆனாலும் அவரால் தொடர்ந்து விளையாட இயலவில்லை. வலி தாங்க முடியாமல் கதறி அழுத கரோலினா, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து எதிர் தரப்பில் இருந்த சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியுடன் இதுவரை சாய்னாவும், கரோலினாவும் 12 முறை மோதியுள்ளனர். அதில் சாய்னா 6 முறையும், கரோலினா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.�,