எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 26) நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “கோழைத்தனத்தை மறைக்கவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீரர் போல் பேசி வருகிறார். தைரியம் இருந்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று காட்டட்டும். அதிமுக டெபாசிட் கூட வாங்காது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியலுக்காகவே எனது பெயரைச் சேர்த்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
அதிமுகவைத் தவறாகப் பேசுகிறவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறியது தொடர்பான கேள்விக்கு, ஆதிவாசிகள்கூட மரியாதையாகப் பேசுவார்கள் என்று தெரிவித்த தினகரன், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல இவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி கவிழ்ந்தால் யார் எங்கிருப்பார்கள் என்றுகூடத் தெரியாது என்று பதிலளித்தார்.
இடைத்தேர்தலுக்குப் பிறகு மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, ஆளும்கட்சியினர் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என்று டெல்லியிடம் கோரிக்கை விடுத்துவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்த தினகரன், இடைத்தேர்தல் நடைபெற்றால் யாருடையது பெரிய கட்சி என்பது தெரிந்துவிடும் என்றார். அதிமுக ஒரு கட்சியே கிடையாது. 33 பேர் நடத்தக்கூடிய டெண்டர் கம்பெனி எனவும் விமர்சித்தார்.�,