rநாகாலாந்து: பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி!

Published On:

| By Balaji

நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமா நகரில் இன்று (மார்ச் 8) நடந்த விழாவில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த நெய்பியு ரியோ முதலமைச்சராகவும், பாஜகவை சேர்ந்த ஒய்.பட்டான் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

பிப்ரவரி 27ஆம் தேதியன்று நாகாலாந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த மூன்றாம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 17 இடங்களும், பாஜகவுக்கு 12 இடங்களும் கிடைத்தன. நாகா மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வெற்றியடைந்தும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பலத்தைப் பெறவில்லை.

கடந்த தேர்தலில் நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்த பாஜக, இம்முறை தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்குப் பிறகு நாகா மக்கள் முன்னணியுடன் பாஜக இணையும் என்ற எதிர்பார்ப்பு உண்டானது.

இதற்கு மாறாக, நெய்பியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சியமைக்கும் உரிமையைக் கோரியது. பாஜக – தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு, ஒரு சுயேச்சை மற்றும் ஐக்கிய ஜனதாதளம் உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக, அம்மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த பி.பி.ஆச்சார்யா, வரும் 16ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நெய்பியு ரியோவுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கோஹிமா நகரில் இன்று (மார்ச் 8) நடந்த பதவியேற்பு விழாவில் நெய்பியு ரியோவுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆச்சார்யா. அவரைத் தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஒய்.பட்டான் துணை முதல்வராகப் பதவியேற்றார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உட்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

மேலும், மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டு, அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். மேற்கண்ட மாநிலங்கள் அனைத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. திரிபுரா மாநிலத்தில் நாளை பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக ஆட்சி அமையவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான சிக்கிமில் தற்போது சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சியின் ஆட்சியும், மிசோராமில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடந்து வருகிறது.

நாகாலாந்து மாநிலத்தில் பாஜகவுக்கு மேலும் 6 அமைச்சர் பதவி தரப்படும் என்றும், எதிர்காலத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை பாஜக மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பகிர்ந்து கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுத்துறை சார்ந்த தலைவர் பதவிகள் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 50%, பாஜகவுக்கு 40%, இதர கூட்டணி கட்சிகளுக்கு 10% என்ற கணக்கில் ஒதுக்கப்படும் என்று இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

�,”