தேசிய நல்லாசிரியர் விருது கொடுப்பதில் மத்திய அரசு புதிய விதிகளை கடைப்பிடிக்க கூடாது என்று கூறியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்குவதில் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய விதிகளின் படி, கல்வித் துறையில் புதுமையான முறையில் பங்காற்றி, பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, “நல்லாசிரியர்களைத் தேர்வு செய்வதில் மத்திய அரசின் புதிய விதி என்ன சொல்கிறது என்றால், ஏற்கனவே தேர்வு குழுவில் மாநிலத்தின் பிரதிநிதிகள் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த தேர்வு குழு இல்லாமல் மத்திய அரசே ஒரு புதிய விதிமுறைகளை வகுத்து, மத்திய அரசு அதிகாரிகளே நல்லாசிரியர்களைத் தேர்வு செய்வது மாதிரி விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த புதிய விதி ஏற்புடையது இல்லை என்று பல மாநில அரசுகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக பெரிய மாநிலமான தமிழகத்தில் இருந்தே ஒரே ஒரு ஆசிரியரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த புதிய விதிகளைப் பின்பற்ற கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.
கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.�,