மூன்று ஆண்டுகள் சரிவைச் சந்தித்திருந்த இந்தியாவின் தோல் ஏற்றுமதி நடப்பாண்டில் ஏற்றம் கண்டுள்ளதாகத் தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தோல் துறையினருக்கு உதவும் வகையில் 2018ஆம் ஆண்டில் அரசு தரப்பிலிருந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டன. இதனால் 2018 ஏப்ரல் முதல் 2019 ஜனவரி வரையிலான காலத்தில் இந்தியாவின் தோல் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 7.24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தோல் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் சென்னைப் பிரிவுத் தலைவரான இஸ்ரார் மெக்கா, *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “அமெரிக்காவுக்கான தோல் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் அரசு மேற்கொண்ட கொள்கை சீர்திருத்தங்களால்தான் தோல் ஏற்றுமதி தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஐரோப்பிய யூனியனை மட்டுமே சார்ந்திருந்தோம்” என்று தெரிவித்தார்.
தோல் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 12.48 சதவிகிதமும், தோல் காலணிகள் ஏற்றுமதி 9.46 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. உலக நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைத் தாண்டி இப்பிரிவில் இந்தியா அதிக முன்னேற்றம் கண்டுவருவதாகத் தோல் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி வாய்ப்பு தொடர்பான அச்சம் ஏற்றுமதியாளர்களிடையே உள்ளது. எனவே தென் அமெரிக்கா உள்ளிட்ட புதிய சந்தை வாய்ப்பை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்காவில் வரிச் சலுகைகள் நீக்கப்பட்டதால் இந்தியாவின் கைப்பைகள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் தோல் ஏற்றுமதி கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.�,