rதீண்டாமை: ஐஐடி பேராசிரியர்கள் மீது வழக்கு!

Published On:

| By Balaji

சக ஆசிரியரைத் தீண்டாமைக் கொடுமையில் துன்புறுத்தியதாக, ஐஐடி பேராசிரியர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கான்பூர் ஐஐடியில் விண்வெளித் துறையில் உதவிப் பேராசிரியராக இருப்பவர் சுப்பிரமணியம் சத்ரெலா. கடந்த ஞாயிறு (நவம்பர் 18) அன்று, தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் இஷான் சர்மா, சஞ்சய் மிட்டல், ராஜீவ் சேகர், சி.எஸ்.உபாத்யாய் ஆகியோர் மீது கல்யாண்பூர் காவல் நிலையத்தில் இவர் வழக்குப் பதிவு செய்தார். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சட்டம் பிரிவு 500ன் கீழ், இவர்கள் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.

கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவரான சுப்பிரமணியம் சத்ரெலா, கடந்த ஜனவரி மாதம் இக்கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இட ஒதுக்கீட்டின் கீழ் படித்து வந்ததால், எல்லா கேள்விகளுக்கும் தன்னால் பதிலளிக்க முடியாது என்று நான்கு பேராசிரியர்களும் அவதூறு பரப்பியதாகத் தனது மனுவில் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். வழக்கு பதியப்பட்ட நான்கு பேராசிரியர்களில் ஒருவரான ராஜீவ் சேகர், தற்போது தன்பாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் மைன்ஸ் கல்வி நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார்.

“சாதிரீதியாக அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், எனது ஆய்வுப் பணியை நால்வரும் தரக்குறைவாக விமர்சித்தனர். எனது மனைவி பற்றிய வதந்திகளைப் பரப்பினர். இதனால், அந்நிய நபர்களிடம் இருந்து மின்னஞ்சல்களையும் சீண்டல்களையும் எதிர்கொண்டேன்” என்று தனது புகாரில் கூறியுள்ளார் சுப்பிரமணியம். கடந்த ஜனவரி மாதம், சுப்பிரமணியம் சத்ரெலா ஆசிரியப் பணிக்குத் தகுதியற்றவர் என்று கூறி சம்பந்தப்பட்ட நான்கு பேராசிரியர்களும் மின்னஞ்சல் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார் கான்பூர் ஐஐடியின் இணை இயக்குனர் மனீந்தர் அகர்வால்.

“தொடர்ச்சியான மன உளைச்சல்களுக்குப் பிறகு, இதுபற்றி சுப்பிரமணியம் என்னிடம் புகார் தெரிவித்தார்; இந்த விவகாரத்தில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, தேசியப் பட்டியலினத்தவருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார் சுப்பிரமணியம். இதுபற்றி விசாரணை செய்த ஆணையம், அவரது புகாரில் உண்மை இருப்பதாகத் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் நான்கு பேராசிரியர்களையும் இடைநீக்கம் செய்யுமாறும், அவர்கள் மீது வழக்கு பதியுமாறும் பரிந்துரை செய்தது.

இதனை எதிர்த்து நான்கு பேராசிரியர்களும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை செய்தது. அதில் உண்மை இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் கான்பூர் ஐஐடிக்குப் பரிந்துரை செய்தது.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதியன்று, இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டது ஐஐடி ஆட்சிக்குழு. பேராசிரியர்கள் மிட்டல், உபாத்யாய், சேகர் ஆகியோரைப் பதவியிறக்கம் செய்தது. ராஜீவ் சேகரை வெறுமனே எச்சரித்து அனுப்பியது.

இதன்பிறகே, இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்தார் சுப்பிரமணியம் சத்ரெலா. அவரது புகார் தொடர்பாக விரைவில் விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார் கல்யாண்பூர் காவல் நிலைய அலுவலர் கே.வி.மிஸ்ரா.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share