திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குத் தரிசனம் செய்யப் பெறப்பட்ட கட்டண அனுமதிச் சீட்டைவிட சிறப்பு இலவச அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகம் என்று புகார் எழுந்துள்ளது.
வரும் வெள்ளியன்று (நவம்பர் 23) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப தரிசனம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று தமிழகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள், 7,000 போலீசார், 1,000 ஊர்க்காவலர்கள் உட்பட சுமார் 8,100 பேர் திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயில் நிர்வாகம், மலை மீது ஏறுவதற்கு 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. “தீப தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்படும் என்றாலும், அதெல்லாம் கண்துடைப்பு தான்” என்கின்றனர் அறநிலையத் துறை ஊழியர்கள். அறநிலையத் துறை ஆணைப்படி காலை தரிசனத்துக்கு 3,000 சிறப்பு அனுமதி அட்டையும், மாலை மகா தீபத்துக்கு 4,000 சிறப்பு அனுமதி அட்டையும் கோயில் நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்டது.
“திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும், அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் அனைத்துச் சிறப்பு அனுமதி அட்டைகளையும் கைப்பற்றிக்கொண்டனர். கோயில் நிர்வாகத்தினருக்கு வெறும் 500 சிறப்பு இலவச அனுமதி அட்டையை (விஐபி பாஸ்) மட்டும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். அதனால், கோயில் ஊழியர்களும் அறநிலையத் துறை அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத சில ஊழியர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முகாம் அலுவலகம் மற்றும் அமைச்சர் வீடுகளில் இலவச சிறப்பு அனுமதி சீட்டு கேட்டு ஆளும் அதிமுகவைச் சேர்ந்த பலர் வலம் வருகின்றனர். இலவச சிறப்பு அனுமதி அட்டையைப் பலர் அதிகமான விலைக்கு விற்பதையும், சிலர் அதனை வாங்குவதையும் காண முடிந்தது.
7,000 சிறப்பு அனுமதி அட்டைகளுக்குக் குறைந்தபட்சக் கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயித்திருந்தால் கூட அறநிலையத் துறைக்குச் சுமார் 35 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்திருக்கும் என்று வருத்தம் தெரிவித்தனர் அறநிலையத் துறை ஊழியர்கள்.
இந்த உண்மை புரியாமல், சில பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்குக் கையில் பணத்தோடு காத்துக் கொண்டிருந்தனர். இது பற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சில போலீசாரிடம் கேட்டபோது, தங்களுக்கு யூனிபார்மே சிறப்பு பாஸ்தான் என்றனர்.�,