இந்திய ராணுவத்தில் சேர முடியாத வருத்தத்தில், ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த வாலிபரான முன்னா குமார், இந்திய ராணுவப் படையில் சேர வேண்டுமென்று சிறுவயது முதலே ஆசை கொண்டிருந்தார். இதனால், தனது 17வது வயது முதல் ராணுவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுதிவந்தார். தொடர்ந்து தேர்வெழுதி வந்தாலும், முன்னாவால் ஒரு முறைகூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் அவர் தீராத மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், இவர் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பைக் கடந்துள்ளார். இதனை நினைத்து வருந்தி, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புலம்பியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று (ஜூலை 10) முன்னா தனது வாழ்க்கையை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்தார். இரவில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு, இவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பேஸ்புக் நேரலை மூலம், தனது தற்கொலையை நண்பர்கள் பார்க்கவும் வழி செய்தார் முன்னா.
தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதத்தில், ராணுவத்தில் சேர முடியாத தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, தனது பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த கடிதத்தின் முடிவில் ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதியுள்ளார் முன்னா. தற்போது, முன்னாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.�,