வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் நெடுஞ்சாலைத் துறை அலுவலக திறப்பு விழா நேற்று (நவம்பர் 13) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
“பயோமெட்ரிக் மூலம் மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 50 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பயோமெட்ரிக் முறை 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் காலங்களில் 6 முதல் 8ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டுவரப்படவுள்ளது.
விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.
சென்னை, காஞ்சிபுரம், கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.�,”