ஊட்டியில் உள்ள பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கவர்னர் மற்றும் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேலில் அமைந்துள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று மே 23ஆம் தேதி பிற்பகலில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.30 மணிக்குக் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவரைத் தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யா சாகர் ராவ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முக்கிய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை நீலகிரி கலெக்டர் சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் விழா முடிந்ததும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவே டெல்லி திரும்புகிறார்.
முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு ஊட்டி ராஜ் பவனில் தங்கி நாளை மே 24ஆம் தேதி (புதன் கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்குச் சென்று மலர் கண்காட்சியை பார்வை விட்டு மதியம் அவர் டெல்லி திரும்புவதாக பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் சென்னை வந்து நாளை மே 24ஆம் தேதி காஞ்சிபுரம் சென்று ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் சங்கர மடம் சென்று மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹைதிமணி தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், காஞ்சி மடம் தொடர்புடைய சங்கர் ராமன் கொலை வழக்கு பிரச்னை காரணமாக, காஞ்சி மடத்திற்குச் சென்று சங்கராச்சாரியார்களை சந்திப்பதை ஜனாதிபதி தவிர்த்தார். அதையொட்டி, காஞ்சிபுரத்தில் நடைபெறுவதாக இருந்த குடியரசுத் தலைவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களையும் ஜனாதிபதி சந்திக்க வேண்டியிருப்பதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக
நேற்றே மே 22ஆம் தேதி ஜனாதிபதி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ஹெலிகாப்டர் தரையிறங்கும் தீட்டுக்கல் பகுதியில் 24 மணி நேரப் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வானிலை காரணமாக ஒருவேளை திடீரென ஹெலிகாப்டர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கோவையில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் ஊட்டி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. மேலும் கோவையில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.�,