Rசோனியாவை வீழ்த்த பாஜக திட்டம்!

Published On:

| By Balaji

அமேதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாஜகவின் பார்வை சோனியா காந்தி தொகுதியான ரேபரேலி பக்கம் திரும்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாரம்பரியமாக நேரு குடும்பத்தினர் போட்டியிடும் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றனர். இதுவரையில் அமேதியிலும், ரேபரேலியிலும் காங்கிரஸ் தோற்றதே இல்லை என்ற வரலாற்றுக்கு இந்தத் தேர்தலில் பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 4 லட்சத்து 68 ஆயிரத்து 514 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராகுல் காந்தி 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2014ஆம் ஆண்டிலும் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். கடந்த முறை அவர் தோல்வியடைந்திருந்தாலும் ஐந்து ஆண்டுகளாக அமேதி தொகுதிக்கு ஒவ்வொரு மாதமும் சென்று தங்கி பணியாற்றியிருக்கிறார். ராகுல் காந்தியை 2019இல் தோற்கடிக்க 2014ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்ததுமே பாஜக வியூகம் வகுத்து செயல்பட தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாகவே அமேதி தொகுதியைக் காங்கிரஸ் இழக்க நேரிட்டதாகச் சொல்லப்படுகிறது..

இந்த நிலையில், சோனியா காந்தியை ரேபரேலியில் வீழ்த்த பாஜக வியூகம் வகுத்துள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வசம் உள்ள ஒரே தொகுதி ரேபரேலிதான். அதனால் அடுத்த தேர்தலில் அங்கும் காங்கிரஸை வீழ்த்தி உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை முற்றிலுமாக வீழ்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே, ரேபரேலியை குறிவைத்துச் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி தொகுதி முழுவதும் பாஜகவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உ.பி பாஜக தலைவர் ஒருவர் தி பிரின்ட் ஊடகத்திடம் பேசுகையில், “2014ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியுற்றார். ஆனால், கடினமாக உழைத்து 2019ஆம் ஆண்டில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்மிருதி இரானி ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற பாஜக தலைமை அவரை ஊக்குவித்தது. அதே யுக்தியைப் பயன்படுத்தி சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த தினேஷ் பிரதாப் சிங்கும் செயல்படவுள்ளார்” என்றார்.

தினேஷ் பிரதாப் சிங் 2018 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்தவர். ரேபரேலியில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 2017ஆம் ஆண்டில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் வென்றது. ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை, கங்கா எக்ஸ்பிரஸ் வே, ரயில்வே திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்தி காங்கிரஸை வீழ்த்த பாஜக திட்டமிட்டுள்ளது. ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அமைச்சரவை ஒப்புதலையும் ஜூன் 11ஆம் தேதி அம்மாநில பாஜக அரசு வழங்கியுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்கவும் யோகி ஆதித்யநாத் அரசு உறுதி எடுத்துள்ளது. ஆனால், ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான். ரூ.823 கோடி செலவில் ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2009இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/06/15/67)**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share