இளைஞர்களைச் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பயிற்சியளிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவத்தின் புதிய தலைமையகத்தை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பற்றியும் சுற்றுலாத் தலங்கள் பற்றியும் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே போதிய விழிப்புணர்வு தேவை. சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள 100 இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகளில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு அதுபற்றிய அறிவு உண்டாகும். இந்தியாவின் பாரம்பரிய சொத்துகளை எண்ணி நாம் பெருமை கொள்ளாவிட்டால் அவற்றைப் பாதுகாக்க இயலாது.
நினைவுச் சின்னங்களில் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஏன் அனுமதி மதிக்கிறது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. தொல்பொருள் பாரம்பரியத்தைக் காப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியமானதாகும். இந்தியா தனது சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சொத்துகளை உலகுக்குப் பெருமையுடன் வெளிக்காட்ட (காட்சிப்படுத்த) வேண்டும். இளையோர்களைச் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பயிற்சியளித்தால் நம்மால் போதிய வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கித் தரமுடியும். இதன்மூலம் தொல்பொருள் சார்ந்த பகுதிகளில் மக்களை ஈர்க்க முடியும் என்பதோடு சுற்றுலாத் துறையும் மேம்படும்” என்று கூறினார்.
மோடி தொடங்கி வைத்துள்ள இந்தப் புதிய தலைமையகத்தில் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய விளக்குகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தில் 1.5 லட்சம் நூல்களையும், பத்திரிகைகளையும் கொண்ட மத்திய தொல்லியல் நூலகமும் உள்ளது.�,