rசிலைக் கடத்தல் வழக்கு: சிபிஐக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த வழக்கு தொடர்பாக, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து, 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் சிலைக் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சிலைக் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைத்ததற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், தமிழக உள் துறைச் செயலாளர் சார்பில் இணைச் செயலாளர் முருகன் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐஜி பொன்மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திவந்த நிலையில், இதுவரை ஒரு அறிக்கை கூட அரசிடம் அளிக்கவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் ஐஜி பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட விசாரணை குறித்த விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை.

சிலைக் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதன் காரணமாகவும், பல மாநில அரசுகளும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், நியாயமான விசாரணை நடக்கவே சிபிஐக்கு மாற்றப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஆகஸ்ட் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் தமிழக காவல் துறைக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் யானை ராஜேந்திரனுக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share