பூட்டான் டைரீஸ் 13 – நிவேதிதா லூயிஸ்
ஜங்க்ஷி காகித ஆலை பற்றி முன்னரே கூகுளாண்டவர் துணைகொண்டு படித்து வைத்திருந்ததால், அங்கே செல்லப் பெரும் ஆவல் கொண்டிருந்தேன். காகிதம் தயாரிக்கும் முறை தயாரிக்கும் இடம், கிடைக்கும் கருப்பொருள், அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பம் இவற்றைக் கொண்டு மாறுபடுகிறது. இமயமலையில் புகழ்பெற்ற டாஃப்னி என்ற குத்துச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் காகிதம் பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. பூட்டானின் தலைநகர் திம்புவின் புறநகர் பகுதியில் இருக்கிறது ஜங்க்ஷி காகித ஆலை. டாஃப்னி மற்றும் டிகாப் மரங்களில் உட்புற பட்டையை உரித்து, உலர்த்துகிறார்கள். உலர்ந்த பட்டையை ஒரு நாள் முழுக்க நீரில் ஊறவைத்த பின், கொதிகலனில் ஐந்து மணி நேரம் கொதிக்க வைக்கிறார்கள். அதன் அருகே நிற்கக்கூட முடியவில்லை, அனல் பறக்கிறது!
கூழாகி வெளிவரும் பட்டையைத் தரம் பார்த்து மூன்றாகப் பிரிக்கிறார்கள். தடிமனையும் அழுத்தத்தையும் பொறுத்துப் பிரிக்கப்படும் காகிதக் கூழை, பீட்டிங் மெஷின் எனப்படும் இயந்திரத்தில் இட்டு அடித்துப் பந்துகளாக்குகிறார்கள். இந்தப் பந்துகளை நீர் நிறைந்த மரக் கொள்கலனில் கொட்டி, ஓட்டைகள் கொண்ட மூங்கில் தட்டுகளைக் கொள்கலனில் உள்ள கூழ், தண்ணீர்க் கலவையில் இட்டு மெதுவே அசைத்து வெளியே எடுத்தால், காகித அட்டை அதில் ஒட்டிக்கொண்டு வருகிறது. அட்டைகளை அழுத்தம் தரும் இயந்திரத்தில் செலுத்தி, ஹீட்டர் பதித்த கான்வாசில் ஒவ்வொன்றாக ஒட்டி, பிரஷ் கொண்டு தேய்த்துக் காய வைக்கிறார்கள்.
இந்தக் காகிதம் மிக மெல்லியதாக இருந்தாலும் படு அழுத்தமாக இருக்கிறது. பூட்டான் மக்களின் மருத்துவ ஏடுகள், மதப் புத்தகங்கள், அரசாணைகள் எல்லாமே இந்தக் காகிதம் கொண்டே 1,000 ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இலையுதிர் காலத்தில் 2,000 முதல் 3,000 அடி உயரத்தில் வளரும் இந்த டாஃப்னி செடியின் பட்டை அறுவடை செய்யப்படுகிறது.
ஆலை வளாகத்தினுள் நின்றுகொண்டிருந்த சிறு செடியைக் காண்பித்து இதுதான் டாஃப்னி என்று அடையாளம் காட்டுகிறார் அங்குள்ள நேபாளிப் பெண் கைடு. கையால் செய்யப்படுவதால் சற்றே விலை அதிகமான காகிதம் இது. ஆனாலும் ஆசைக்காக இந்த காகிதத்தில் வரையப்பட்ட சிறிய தங்க்கா போன்ற ஓவியம் ஒன்றை வாங்கி வந்துவிட்டேன்.
தங்க்கா ஓவியங்கள் திபெத், நேபாளம் மற்றும் இந்தியாவின் இமயமலைச் சாரல் பகுதிகளில் வெகு பிரசித்தம். இயற்கை வண்ணங்கள் கொண்டு நுணுக்கமாகத் தீட்டப்படும் இந்த ஓவியங்களில் தங்க நிறம் பெரும்பாலும் புத்தரின் முகத்துக்கோ, முக்கியப் பொருளுக்கோ கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிறம் தங்கத் தகட்டைத் துகளாக்கியே வண்ணமாக்கப்படுகிறது! அதனால்தான் தங்க்கா ஓவியங்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கின்றன.
**பெண்கள் ராஜ்ஜியம்**
அடுத்து சென்றது திம்புவிலுள்ள ககியல் லந்துருப் வீவிங் சென்டர். முழுக்க முழுக்க இங்கு பெண்கள் ராஜ்ஜியம்தான். தனி அறை ஒன்றில் ஐந்து பெண்கள் தறிகளில் அமர்ந்து நெய்துகொண்டிருக்க, சுற்றிலும் குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தறி ஓசையுடன் குழந்தைகளின் சிரிப்பொலியும், அவ்வப்போது பிரார்த்தனையும் சேர்ந்து கலவையாக ஒலிக்கின்றன. கிரா என்று சொல்லப்படும் பூட்டானிய வேலைப்பாட்டுடன் கூடிய உடையை நெய்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள். இடுப்பில் தறிக்கயிற்றைக் கட்டிக்கொண்டு அவர்கள் கைகளால் நெய்வது பார்க்க அதிசயமாக இருக்கிறது. அவர்களுடன் அமர்ந்து ரசிக்கலாம், கேள்விகள் கேட்கலாம்.
தறி இருக்கும் அறைக்கு அடுத்த அறையில் தரையில் படுத்து ‘பெப்ப பிக்’ கதையை வாசித்துக்கொண்டிருக்கிறாள் சிறுமி ஒருத்தி. புகைப்படம் எடுக்கிறேன் என்று சொன்ன அடுத்த நொடியே நடிகைகள் தோற்றுவிடும் அளவுக்குப் புன்னகைத்து போஸ் கொடுத்தாள். இந்த அறையில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்ஃபுகள், கிரா, ஷால் போன்றவை பிசிறில்லாமல் வெட்டி சரிசெய்யப்பட்டு விற்பனைக்குத் தயார் செய்யப்படுகின்றன. எப்படியாவது ஒரு கிரா வங்கியே தீர்வது என்ற ஆர்வத்தில் இருந்த நாங்கள் படியேறி மாடியில் இருந்த வீவிங் சென்டரின் விற்பனை மையத்துக்குச் சென்றோம். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூட்டானி பூட்ஸுகள், கிரா, ஸ்கார்ஃபுகள், திபெத்திய நகைகள் என்று கண்கொள்ளா வண்ணக் காட்சியாக இருந்தது.
**விலை உயர்ந்த முடி!**
அழகான யாக் மயிர்க்கற்றை ஒன்றும் காற்றில் அசைந்தபடி இருந்தது. கொள்ளை விலையாக்கும்! இந்தியாவில் பெரிதும் கிராக்கி உள்ள பொருள் இந்த சவுரி முடி! வள்ளுவர் சொன்ன
*மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்*
*உயிர்நீப்பர் மானம் வரின்*
என்ற குறளில் குறிப்பிடப்பட்டிருப்பது கவரி மான் அல்ல, கவரி “மா”, கவரி கொண்ட விலங்கு என்று மொழி பெயர்த்திருக்கிறார் ஜி.யூ.போப். ஆறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த காஸ்மாஸ் இண்டிகோப்ளூஸ்டஸ் என்ற கிரேக்கப் பயணியின் ‘செயில்டு டு இந்தியா’ குறிப்பு இப்படிச் சொல்கிறது: “பெரிய அளவுடைய இந்த விலங்கிலிருந்து போருக்குச் செல்லும் குதிரைகளையும் போர்ப் பதாகைகளையும் அலங்கரிக்கப் பயன்படும் ‘டோப்பா’ என்ற மயிர் கிடைக்கிறது. இந்த விலங்கின் ஒரு மயிர் மரங்களில் சிக்கிக்கொண்டாலும், அதை இழக்க மறுத்து அப்படியே நின்றுவிடுகிறது. யாராவது ஒருவர் வந்து மொத்த வால் கற்றையையும் வெட்டி அதை விடுவித்தால் மட்டுமே அங்கிருந்து அகலுகிறது!”
அவர் சொல்லும் அதே விளக்கம் நம் கவரி மாவுக்குப் பொருந்துகிறது அல்லவா? இதே போல 10ஆம் நூற்றாண்டின் திபெத்தியக் காவியமான “எய்ட்டி வெர்சஸ் இன் பிரெயிஸ் ஆஃப் அதிஷா” என்ற அதிஷா குறித்து அவர் சீடர் நாக்த்சோ எழுதியதில், “யாக் தன் வாலைக் காப்பது போல நீ நீதியைக் காத்தாய்” என்று ஒப்புமை சொல்கிறார்.
அந்தக் கவரி என்ற சொல்லிலிருந்து வந்ததுதான் சவுரி, சாமரம்! இன்றும் சமண, இந்து தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம்பிடிக்கிறது இந்த யாக் வால் மயிர்! அங்கிருந்த பொருள் எதுவும் நாங்கள் வைத்திருந்த மொத்தப் பணம் 3,000க்குள் இல்லை! ஒரு கிராவின் விலை 200 டாலர் என்றதும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தோம்.
அடுத்த நாள் திம்புவிலிருந்து பாக்தோக்ரா வரை பயணம் மட்டுமே செய்ய முடியும் என்பதால், ஷாப்பிங் செய்வது என்று தீர்மானித்து, திம்பு மெயின் மார்க்கெட்டுக்குச் சென்றோம். முக்கிய பஜார் தெருவில் இருக்கிறது திம்புவின் ஏபிசி மார்க்கெட். ஆதென்டிக் பூட்டானீஸ் கிராஃப்ட்ஸ் பஜார் தான் மருவி ஏபிசி மார்க்கெட் ஆகிவிட்டது. ஹாங்காங்கின் பிரசித்தி பெற்ற லேடீஸ் மார்க்கெட் போலத்தான் இதுவும்! இங்கு முற்றிலும் பெண்கள் ஆளுமைதான். கிட்டத்தட்ட 150-200 கடைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசு அமைத்துத் தந்திருக்கும் ஒரே மாதிரியான கடைகள். ஒவ்வொன்றிலும் பைகள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்கள், வெண்கலம், குவார்ட்ஸால் செய்யப்பட்ட புத்தர் சிற்பங்கள், ஓம் மணி பத்மே ஹும் பிரார்த்தனைக் கொடிகள், திபெத்திய வெள்ளி நகைகள் என்று கண்கொள்ளாத கைவினைப் பொருள்கள் இருக்கின்றன. கடைகளுக்கு வெளியே பிளாட்ஃபார்மில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.
கடைகளில் பெரும்பாலும் ஆள் இருப்பதில்லை! நாம் எதையாவது எடுத்து, அடுத்த கடையில் காண்பித்து விலை கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள். வாடிக்கையாளர்கள் மேல் அத்தனை நம்பிக்கை! ஊரில் இருக்கும் நண்பர்கள், குடும்ப நபர்களுக்கு ஆளுக்கு ஒன்றாவது வாங்கியாக வேண்டுமே என்று வாங்கிக் குவித்துவிட்டோம். பர்சுகளைத் தடவிப்பார்த்தால் மிஞ்சியது 300 ரூபாய் மட்டுமே! பூட்டானில் இந்தியாவின் எந்த ஏடிஎம் கார்டும் வேலை செய்யாது. வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும் எடுக்க முடியாது… சந்தேகமாக இருந்தால் உங்கள் ஏடிஎம் அட்டையின் பின்புறம் திருப்பிப் பாருங்கள். “நாட் ஃபார் யூஸ் இன் நேபாள் அண்டு பூட்டான்” என்று தெளிவாக அச்சிட்டிருப்பார்கள்! கையில் கொண்டு போகும் பணத்தைத்தான் செலவிட வேண்டும்.
இன்னும் ஒரு நாள் முழுக்க பயணம் பாக்கி, அன்றிரவு முதல் அடுத்த நாள் இரவு இந்திய எல்லையைத் தொடும்வரை சாப்பாடு செலவு வேறு! “எவ்வளவோ பார்த்துட்டோம், இதப் பார்த்துக்க மாட்டோமா?”, என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு அன்று இரவு தங்க வேண்டிய பபேசா – திம்பு ஹெரிடேஜ் ஹோமை வந்தடைந்தோம்.
(பயணத்தின் பதிவுகள் வரும் செவ்வாயன்று தொடரும்)
[பகுதி 1](https://minnambalam.com/k/2019/04/30/10)
[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/13/72)
[பகுதி 5](https://minnambalam.com/k/2019/05/17/18)
[பகுதி 6](https://minnambalam.com/k/2019/05/21/28)
[பகுதி 7](https://minnambalam.com/k/2019/05/24/48)
[பகுதி 8](https://minnambalam.com/k/2019/05/28/17)
[பகுதி 9](https://minnambalam.com/k/2019/05/31/14)
[பகுதி 10](https://minnambalam.com/k/2019/06/04/18)
[பகுதி 11](https://minnambalam.com/k/2019/06/07/44)
[பகுதி 12](https://minnambalam.com/k/2019/06/11/10)
(கட்டுரையாளர் **நிவேதிதா லூயிஸ்**, சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர்.எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதி வருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
�,”