இந்தியில் சல்மான்கானுக்கு செம மைலேஜ் கொடுத்த படம். அதைவிட, அந்தப் படம் தெலுங்கில் கப்பர் சிங்-காக ரீமேக் செய்யப்பட, பவன் கல்யாணுக்குக் கிடைத்தது மரண மைலேஜ். (தமிழில்கூட ஒஸ்தி என்றபெயரில் சிம்பு, நாஸ்தி செய்தாரே) பவனுக்காக மாஸா? அல்லது பவன் நடித்ததால் படத்துக்கு மாஸா? என்பது இன்னமும் மனவாடுகளைத் தவிர்த்து, அனைவரும் பேசி மாயும் ஒரு விஷயம். காரணம், பவர் ஸ்டாரைத் திரையில் பார்த்தாலே படம் ஹிட் என சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டவர்கள் சீமாந்திர, தெலுங்கானா மக்கள். அப்படிப்பட்ட கப்பர் சிங்கின் இரண்டாம் பாகம் ‘சர்தார் கப்பர் சிங்’. பற்றாக்குறைக்கு படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பவரும் சாட்சாத் பவன் கல்யாண் என்றால் கேட்கவா வேண்டும்!. ஓபனிங் ‘அதிரிப்போயிந்தி’.
இன்னமும் மன்னராட்சிமுறை, இரத்தன்பூர் எனும் ஒரு சமஸ்தானத்தில் இருக்கிறது. அங்கே அடாவடி செய்யும் ஓர் இராஜவம்சம் மற்றும் மக்களுக்கு நல்லது செய்யும் மற்றொரு இராஜவம்சம். கெட்டவர்களின் கை ஓங்க, நல்லவர்கள் பக்கம் இருக்கும் காவலதிகாரி கப்பராக பவன். அந்த நல்ல இராஜவம்ச இளவரசியாக நாயகி காஜல் அகர்வால். கதையில், மீதி என்ன நடக்கும் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.
பவன் அறிமுகக்காட்சிக்கே, கொடுத்த காசு வசூல் என திரையரங்கில் பேசிக்கொள்கிறார்கள் மனவாடுகள். ஆமாம், சும்மா சொல்லக்கூடாது, பவர்ஸ்டார் குதிரையில் துப்பாக்கியுடன் வரும் அந்தக் காட்சி, அரங்கை ஆர்ப்பரிக்க வைக்கிறதுதான். ஒன் மேன் ஆர்மி! காஜலும் அவ்வளவு அழகு, கவர்ச்சி. இளவரசி கதாபாத்திரம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் மகதீரா நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வழக்கமான தெலுங்குப் படங்களைப்போல, நாயகனுக்காக மட்டுமே காட்சிகள் யோசித்து எடுக்கப்பட்ட படம்தான் இதுவும். படம் முழுக்க முழுக்க ஒரே ஆள்தான். அது, பவன் கல்யாண்தான். வேறு யாருக்குமே வேலையில்லை. முதல் பாகத்தில் வேலைசெய்த அதே ‘பவன் மேஜிக்’ இதிலும், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது. ஆனால், அவர் தவிர்த்த காட்சிகள் எவையும் படத்தில் அவ்வளவாக எடுபடவேயில்லை.
ஏன்….எப்போதும் ஏறி அடிக்கும் பிரம்மானந்தத்தின் நகைச்சுவையும்கூட தேறவில்லை.
ஆமாம், என்னதான் பெரிய நடிகர்கள்,பட்ஜெட் என எல்லாமும் இருந்தாலும், அசல் ஹீரோவான திரைக்கதை நன்றாக இல்லாவிட்டால், எவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் படம் சுமாராகத்தான் அமையும் என்பதற்கு ‘சர்தார் கப்பர்சிங்’ மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பவர்ஸ்டார்.
-புகழ்�,