7சி என்டர்டெயின்மென்ட் ஆறுமுக குமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டையின்மென்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குநர் ஆறுமுக குமார். ஆறுமுக குமார் எனது நீண்ட கால நண்பர். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக்கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். படத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக் தன்னைவிட மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.இந்தக் குணம்தான் கெளதம் கார்த்திக்கை மிகப் பெரிய இடத்துக்குக் கொண்டுசெல்லும். அவரை இந்தப் படத்தில் பரிந்துரைத்ததற்குப் பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிகச் சிறந்த வருடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கெளதம் கார்த்திக் “இந்தப் படத்தில் ஹரிஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படித்தான். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி என்னைப் பரிந்துரைத்தது எனக்குப் பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக்கொண்டிருப்பவர். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாகப் பயணித்துவருபவன் டேனிதான். கேமராமேன் ஸ்ரீசரவணன் ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்யக்கூடியவர். படத்துக்காக என்ன வேணாலும் செய்யத் துணிந்தவர். இந்தப் படத்துக்காக புதுமையான இசையைக் கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். இயக்குநர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம்தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டு வாங்கி, சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
“இயக்குநர் என்கிட்ட இந்தப் படத்தில் கோதாவரினு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களானு கேட்டாங்க. ஆறுமுக குமார் தயாரிப்பாளராக, இயக்குநராக இருந்தும் கொஞ்சம்கூட பதற்றமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார். இந்தக் குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்த குழுவுடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நடிகை காயத்ரி.
காயத்ரியைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆறுமுக குமார், “இந்தக் கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட். நான் இயல்பாகப் பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது தான் ரொம்பப் பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெருகேற்றிச் செய்வது என்ற எண்ணம் உடையவர். அதுதான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம். படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடினு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. படத்தில் ஒவ்வொரு செட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு இசையமைக்க நல்ல ஸ்கோப் இருந்தது, அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“படத்தில் ஒப்பந்தமாகும்போது விஜய் சேதுபதி மட்டும்தான் எனக்கு அறிமுகமானவர். மொத்த குழுவும் எப்படியிருக்குமோ என்ற பயத்தில்தான் ஷூட்டிங் போனேன். ஆனால் மொத்த குழுவும் ரொம்ப நெருங்கிப் பழகியது. இயக்குநர் ஆறுமுகத்துக்கு நல்ல காமெடி சென்ஸ்பல் இருக்கிறது. நல்ல காமெடி நடிகராக வரவும் வாய்ப்பு இருக்கிறது. சூது கவ்வும் படத்தில் பார்த்த விஜய் சேதுபதிக்கும் இந்தப் படத்தில் பார்க்கும் விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் நிறைய மாற்றம். காயத்ரி மாதிரி ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இன்னும் கொண்டாடவில்லை எனத் தெரியவில்லை. நிறைய உழைப்பைப் போட்டு நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கொண்டாடப்படுவார்” என்றார் நடிகரும் ஆர்.ஜேவுமான ரமேஷ் திலக்.
இந்த விழாவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், திங்க் மியூசிக் சந்தோஷ், கூத்துப்பட்டறை முத்துகுமார், லைன் புரொட்யூசர் யோகேஷ் எனப் பலர் கலந்துகொண்டனர்.
�,”