புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால், நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதைப் பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும் புதினாவை பிரதானமாக வைத்து இந்தப் புதினா சாதத்தைச் செய்யுங்கள். ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியைத் தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீரவும் புதினா உதவுகின்றது.
**என்ன தேவை?**
அரிசி – 1 கிண்ணம்
ஆய்ந்து, அலசிய புதினா – ஒரு கிண்ணம்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
ஸ்வீட் கார்ன், நெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர்விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில், நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உதிர்த்த ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள புதினாவைச் சேர்த்து, 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்விட்டு, கிளறி கழுவி ஊற வைத்துள்ள அரிசியைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: கிரீன் வெஜிடபிள் ரைஸ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/26/5)�,