Rகாஷ்மீரில் பாஜக நிர்வாகி கொலை!

Published On:

| By Balaji

பாஜகவில் இணைந்து பணியாற்றிவந்த சபீர் அகமது என்பவர், இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை அடையாளம் தெரியாத சில நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

ஜம்மு காஷ்மீர் புலவாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபீர் அகமது பட். இவர் ஸ்ரீநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து கட்சிப் பணியாற்றி வந்தார். பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, ஸ்ரீநகரில் இருந்து அவர் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை புலவாமாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு சபீரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சில நபர்கள், அவரைக் கடத்திச் சென்றனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், சபீரின் வீட்டிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில், ராக் லிட்டர் என்ற ஊரில் அவரது சடலம் கிடந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவுக்கு, ஜம்மு காஷ்மீர் பாஜகவைச் சேர்ந்த அல்டாப் தாகூர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். “சபீர் அகமது எங்களது தொகுதியில் கட்சித் தலைவராக இருந்துவந்தார். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அவர், பக்ரீத் கொண்டாடுவதற்காக வந்தபோது பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவின் சார்பாக சபீர் போட்டியிட முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தாக்குதலில் பலியான சபீரின் குடும்பத்திற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார். “இந்தக் கோழைத்தனமான செயல் கண்டனத்திற்குரியது. தங்களுக்கான சிறப்பான எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் காஷ்மீர் இளைஞர்களைப் பிரிவினைவாதிகளால் தடுக்க முடியாது. இந்த வன்முறைச் சுழற்சி நீடிக்காது. எங்களது கட்சித் தொண்டர்களின் தியாகங்கள் வீண் போகாது. சபீர் அகமது பட்டின் குடும்பத்தினருக்கு பாஜக முழு ஆதரவளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும், தெற்கு காஷ்மீரில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இவரது கொலைக்கு, இதுவரை எந்தப் பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share