Rகர்நாடகா: சட்டமன்றத்தில் அமளி!

Published On:

| By Balaji

கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் இன்று (ஜூலை 18) காலையில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மதியம் 3 மணி வரையில் மதிய உணவு இடைவேளைக்காக அவை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு பின் எம்.எல்.ஏக்கள் மீண்டும் அவையில் கூடினர். அப்போது, இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று பாஜக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.

அதன்பின் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவகுமார், “அவையை பாஜகவினர் திசைதிருப்புகின்றனர். எட்டு எம்.எல்.ஏக்கள் ஒன்றாக பயணித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தற்போது மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறார். இந்த எம்.எல்.ஏக்கள் எல்லாம் எங்கே? எங்களது எம்.எல்.ஏக்களை பாதுக்காக்க வேண்டுமென்று சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், “யார் எந்த விமானத்தில் பயணித்தார்கள் என்பதுபற்றி நான் விசாரிக்கவில்லை. எம்.எல்.ஏக்கள் கடத்தப்படுவதாக சித்தராமைய்யா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுதான் எனது பிரச்சினை. ஸ்ரீமந்த் பாட்டிலும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கடும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் இருப்பதால் சட்டமன்றத்திற்கு வரமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

ஸ்ரீமந்த் பாட்டில் மும்பை புனித ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று காலை நெஞ்சு வலி வந்ததாக கூறப்படுகிறது. அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மீண்டும் கூடியது. அப்போது பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், “எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ரிசார்டுக்கு அருகிலேயே மருத்துவமனை இருக்கிறது. ஆனால் ஸ்ரீமந்த் பாட்டில் ஏன் சென்னை சென்று அங்கிருந்து மும்பைக்கு சிகிச்சைக்காக சென்றார்? அவர் நலமாகத்தான் இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது பாஜகவின் சதி” என்று பேசினார்.

இது ஒருபுறமிருக்க, ஜகதிஷ் ஷெத்தர், அரவிந்த் லிம்பவலி, பசவராஜ் பொம்மை, ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் குழு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து இன்றைய தினத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர், “ஆளுநர் எனக்கொரு செய்தியை அனுப்பியிருக்கிறார். அதை அவைக்கு படித்துக் காட்டுகிறேன். **“நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது. முதலமைச்சருக்கு எப்போதுமே பெரும்பான்மை இருக்க வேண்டியது அவசியம். இன்றைய தினத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”**. ஆளுநர் எனக்கு உத்தரவிடவில்லை. இன்றைய தினத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, “அனைவருக்கும் நேரம் கொடுங்கள். நள்ளிரவானாலும் பரவாயில்லை. உங்களுக்கு சரியென்றால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் தலைவர்களுக்கு நேரம் கொடுங்கள். இந்த நாளை நம்பிக்கை வாக்கெடுப்புடன் நிறைவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வாதங்கள் எழுந்தன. மும்பையில் சிகிச்சைக்காக சென்ற ஸ்ரீமந்த் பாட்டிலின் படத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏக்களை பாஜக வேட்டையாடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஸ்ரீமந்த் பாட்டில் கடத்தப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் தரப்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சட்டமன்றம் நாளை (ஜூலை 19) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அவையை விட்டு வெளியேற எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா மறுத்தார். எம்.எல்.ஏக்கள் இங்கேயே உறங்குவதற்காக மெத்தை, உணவுக்காக ஏற்பாடு செய்யப்படும் என்று எடியூரப்பா தெரிவித்தார். பெண் எம்.எல்.ஏக்கள் மட்டும் 9 மணிக்கு புறப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share