rகடைமடை பகுதி: முதல்வர் பார்வையிட வேண்டும்!

Published On:

| By Balaji

“கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் வந்துவிட்டது என முதல்வர் பொய் கூறுகிறார்” எனக் குற்றம்சாட்டியுள்ள முத்தரசன், “கடைமடை பகுதிகளைப் பத்திரிகையாளர்களோடு முதல்வர் பார்வையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகக் காவிரியில் அதிகளவு நீர் திறக்கப்பட்டது. எனினும் இந்த நீர் கடைமடை பகுதிகளுக்குச் செல்லாமல் வீணாகக் கடலில் கடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடைமடை பகுதிகள் தூர்வாராமல் விட்டதே இதற்குக் காரணம் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

எனினும் கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் தொடங்கி விட்டது; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டுக்கொண்டு இருக்கிறது.மேட்டூர் அணை ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை நிரம்பியது. 20,000 கனஅடி நீர் நாளொன்றுக்குத் திறந்து விடப்பட்டது.

முக்கிய ஆறுகளில் இருந்து நீர் வரத்து வாய்க்கால்கள் வழியாகக் கிராமங்களுக்கு தண்ணீர் வந்து இருக்க வேண்டும். ஆனால், ஒரு சொட்டு தண்ணீர்கூட கடைமடை பகுதிகளுக்கு வரவில்லை. விவசாயிகள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். கையில் வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலைகிற கதையாக இருக்கிறது.

ஆனால் தமிழக முதல்வர், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் வந்துவிட்டது என்று உண்மைக்கு மாறான செய்திகளை கூறிவருகிறார்கள். முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் இவர்களோடு கடைமடை பகுதிகளைப் பார்வையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை நடைபெற்ற வேலைகள் மற்றும் அவற்றுக்குச் செலவிடப்பட்ட நிதி குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share