கஜா புயல் குறித்து எந்தவித எச்சரிக்கையையும் கவலையையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தவில்லை என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே இன்று அதிகாலை கஜா புயல் கரையை கடந்த நிலையில், திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கும் மேலான இடங்களில் மிகப்பெரிய அழிவை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து பிரதமர் மோடி எந்தவித எச்சரிக்கையையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு, ஒக்கி புயல் கன்னியாகுமரியை தாக்கி குஜராத்தை நோக்கி நகரப்போவதாக தகவல் வந்தவுடன், எச்சரிக்கையாக இருக்கும்படி செய்தி வெளியிட்ட பிரதமர், தமிழகத்தின் 6 மாவட்டங்களை சிதைத்துள்ள கஜா குறித்து எந்தவித முன்னெச்சரிக்கை செய்தியையும் வெளியிடவில்லை. தற்போது பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அவரிடம் இருந்து எந்தவித செய்தியும் வரவில்லை.
இதை மறைப்பதற்காகவும், மக்களிடம் இருந்து திசை திருப்பவும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் குறித்த புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தங்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கீழ்த்தரமான அரசியலை பாஜக செய்துள்ளது.
இந்த நேரத்தில் மக்களை கை தூக்கிவிடத் தமிழக இளைஞர்கள் திரளவேண்டும். மக்கள் மீள்வதற்கான எந்த உதவியையும் பாஜக அரசு செய்யப்போவது இல்லை. தானே புயல் முதல் இன்றுவரை போதுமான அளவு நிதி உதவியையோ மீட்பு பணிகளையோ செய்யவில்லை.
தமிழகம் மட்டுமல்லாது ஈழத்திலும் புயலால் அழிவு ஏற்பட்டுள்ளது. ஈழத்தில் உள்ள தமிழர்கள் மீள்வதற்கான வாய்ப்புகளையும் உலக தமிழர்கள் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.�,