Rஓய்வை அறிவித்த சிக்ஸர் மன்னன்!

Published On:

| By Balaji

சர்வதேச கிரிகெட் போட்டியில் இருந்து தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை அறிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில்.

39 வயதான கெயில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அண்மை காலமாக தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருந்தார். தற்போது உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துடனான முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கவுள்ளார். கடந்த ஆண்டு ஜூலையில் வங்க தேசத்துக்கு எதிராக ஆடியதற்கு பின் அவர் பங்கேற்கும் போட்டி இதுவாகும். இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து கெயில் ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி தெரிவித்துள்ளது.

103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் 7214 ரன்களை குவித்துள்ளார். 284 ஒருநாள் போட்டிகளில் 9727 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 1607 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிக சதமடித்த வீரர் என்ற பெயரை கெயில் பெற்றுள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லாராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை கெயில் கடந்த ஆண்டு சமன் செய்தார். இருவரும் 476 சிக்சர்கள் அடித்துள்ளனர். ஆனால் கெயில் 443 போட்டிகளில் இந்த சாதனையை புரிய அப்ரிடியோ 524 போட்டிகளில் பங்கேற்று இத்தனை சிக்ஸர்களை அடித்துள்ளார்.

மேலும் கெயில் ஐபிஎல் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் கிளப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஓய்வுக்குப் பின் அவற்றை தொடர்வாரா என்பது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share