என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு தயாராகிவிட்டதாக படத்தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்த படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. முதன்முறையாக கவுதம் மேனனும், தனுஷும் இப்படத்தின் மூலம் இணைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் பல்வேறு இடையூறுகளுக்கு நடுவே படப்பிடிப்பு பணிகள் நிறைவடையாமல் இழுபறி நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சசிகுமார் பங்கேற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்பையில் வைத்து முடிக்கப்பட்டுள்ளன.
பல மாதங்களாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து எந்த செய்தியும் வெளியாகாமலே இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை நோக்கி பாயும் தோட்டா சென்சாருக்கு தயாராகிவிட்டது. ஓரிரு நாட்களில் சென்சார் வேலைகள் முடிந்துவிடும். நீங்கள் காத்திருந்ததற்கு தக்க படமாக இப்படம் இருக்கும். பொறுமையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,