சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பிவிட்டதாகச் சமூக ஊடகங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மறுத்துள்ளார். பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று (நவ.4) கூறுகையில், ”ஏரிகளின் கொள்ளளவு குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி ஆகியவற்றில் 42 சதவீதம் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது.
நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மழைநீர் சூழ்ந்தால் அச்சப்பட வேண்டியதில்லை. நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி வெளியிடப்படும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மழைக்குத் தமிழகத்தில் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி யாரும் இறக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.�,