rஎலிக்காய்ச்சல்: மக்கள் பீதி அடைய வேண்டாம்!

Published On:

| By Balaji

கோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி கூறியுள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் (leptospirosis) எனும் எலிக்காய்ச்சல் காரணமாக கேரளாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கொண்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). காய்ச்சல் காரணமாக, இவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 5ஆம் தேதி மாலை கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு (செப்டம்பர் 6) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்களிடையே எலிக்காய்ச்சல் குறித்து பீதி ஏற்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்பதால், மக்கள் பீதியடைய வேண்டாம். கோவையில் யாரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. கேரளா சென்று வருபவர்களுக்குத்தான் எலிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால், கோவையில் சுகாதாரத் துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி கூறினார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், எலிக்காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று தெரிவித்தார். “மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் வரும் பொதுமக்கள், அலட்சியமாக இருக்காமல், சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்களுக்குக் காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். எலிக்காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் வால்பாறையைச் சேர்ந்த 65 வயதான ஒருவரும் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை அவிநாசியில் உள்ள இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் நீலகிரியைச் சேர்ந்த 2 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share