Rஇளையராஜா – விருதுகளின் கெளரவம்

public

– ஷரண்கே

பண்ணைப்புரத்துத் தெருக்களில், மூங்கில் கழிகளை ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகளில் இருந்து, கழிகளை உருவித் துளையிட்டு, புல்லாங்குழல் செய்து வாசித்துப் பழகிய அந்தச் சிறுவனுக்கு அன்று தெரிந்திருக்காது; அவன், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலக்கப் போகிறான்! என்று. அன்னையின் தாலாட்டையும், உழைக்கும் மக்களின் நாட்டுப் பாடல்களையும் கேட்டு வளர்ந்ததும், தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் பல்லாயிரம் பொதுவுடமை இயக்க மேடைகளில் பங்களிப்புச் செய்ததுமாக அவர், பால்யத்தில் கற்றவை மக்கள் இசையில் இருந்தே உருவானது.

அவர், தமது 25வது வயதில் சினிமாவில் தடம்பதிக்க நகரத்தை நோக்கி படையெடுத்தபின்தான் கர்னாடக செவ்வியல், இந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசைகளின் அறிமுகம் கிடைக்கிறது. அதன்பிறகே, அந்த இசை வகைகளைக் கற்கிறார். நாட்டாரிசையில் ஆழமாக வேரூன்றியிருந்த அவருக்கு, இந்த இசை வடிவங்களைக் கேட்கும்போது நாட்டாரிசையின் வேறு பரிமாணமாகத்தான் அறிமுகம் ஆகிறது. ‘அதுதானே இது!’ என வியக்கிறார். இசையை பிரித்தறியா மனம் அவருக்கு வாய்த்தது பெரும்பேறு. உலகின் மகோன்னதக் கலைஞர்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஒருவகையான பிரபஞ்ச தரிசனம் அது. மொஸார்ட்டின், பீத்தோவனின், பாஹின் இசைகளை ஆராயும் அறிஞர்கள், அவர்களின் இசையில் ஆழமாக ஊடுருவியிருக்கும் அந்தக் காலத்தைய நாட்டாரிசையின் தாக்கங்களை இன்று கண்டடைகிறார்கள். வேறு எப்படி இருக்கமுடியும். உழைக்கும் மக்களின் இசையில்தானே ஆன்மா இழைய முடியும்-செவ்வியல் இசையின் அலங்காரங்களோ, மேற்பூச்சுகளோ இன்றி.

பிக்காசோ, தம் ஓவியங்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘அது, ஆதிமனிதர்களின் கட்டற்ற கற்பனையை ஒட்டி வரைதலில் நிகழும் அற்புதங்கள்’ என்பார். ‘தமக்குள் இருக்கும் சிறுவனைக் கண்டடைந்ததே தமது கலையின் உச்சம்’ என்பார். தமக்கு அறிமுகமாகும் இசை வடிவங்களையெல்லாம் கலைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனாகத்தான் இளையராஜாவும் இருக்கிறார். விளையாட்டு மனம் தரும் உந்துதலே, சினிமாவில் வெற்றிபெற்ற பின்னரும் காலை நான்கு மனிக்கு எழுந்து புதிய இசையைக் கற்கவைக்கிறது. 21ம் நூற்றாண்டிலும் புதிய இசைக் கருவிகள், சப்தங்கள், வடிவங்கள் என்று தேடியலைந்து கற்கிறார். ராஜாவின் மேற்கத்திய செவ்வியல் இசையை ஒலிப்பதிவு செய்யும்போது நடத்துனராகவும், அவருக்கு ஜாஸ் இசை பயிற்றுநராகவும் இருக்கும் லாஸ்லோ கொவாக்ஸ் சொல்கிறார்: “நான் அவருக்கு ஜாஸ் இசையை கற்றுத் தருகிறேன், அவர் ஜாஸில் என்னவெல்லாம் செய்யலாம் என்று எனக்குக் கற்றுத் தருகிறார்” என்று. ஆம். ஒரு சிறுவனின் ஆர்வம் அப்படித்தானே இருக்க முடியும். இன்னும் இன்னும் இன்னும் புதிதாக என்னவென்ற தேடலோடு கூடிய விளையாட்டுத்தனம்.

எல்லா விதிகளையும் மீறும் சாகசத்தன்மையின் உச்சத்தில்தான் உன்னதமான கலைகள் பிறக்கின்றன. அதனால்தான், அப்படி கலை படைக்கும் ஒருவரை சமூகத்தில் அதிநாயகராகப் பார்க்கிறார்கள். அது, அப்படி ஒன்றும் கடினமான காரியமில்லை. நாம் கற்றதை மறக்க வேண்டும். ராஜா கற்றதை மறக்கவும், புதிதாகக் கற்கவும் பின், அதை உடைத்து ஒரு பாய்ச்சல் நிகழ்த்தவும் எப்போதும் தயாராகவிருக்கும் ஒரு சிறுவனாக இன்னும் இருக்கிறார். இசை என்றால் என்னவென்றே தமக்குத் தெரியாதென்றும், அது என்னவென்று தெரிந்துகொள்ளவே இசையமைப்பதாகவும், அது தெரியவரும்பட்சத்தில் தாம் இசையமைப்பதை நிறுத்திவிடப் போவதாகவும் சொல்கிறார் ராஜா. நமது பிரார்த்தனை எல்லாம், அவருக்கு இசை தெரியாமலே இருக்கட்டும் என்பதுதான்.

முதல் திரைப்படத்திலேயே தமக்கு நாட்டரிசையில் இருக்கும் ஆளுமையைப் பறைசாற்றியவர் தனது, ஆயிரமாவது படத்திலும் சற்றும் குறைவில்லாமல் அதே ஆற்றலோடும், படைப்பூக்கத்தோடும் இசைத்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. செவ்வியல் இசைக் கலைஞர்களால் ஒதுக்கப்பட்ட நாட்டார் இசைக்கு அங்கீகாரம் மட்டுமல்லாது, அரியணையையும் பெற்றுத் தந்து, அதில் கம்பீரமாக அமரவைத்திருக்கிறார் ராஜா என்றால் அது மிகையல்ல. அவரது வரவுக்குப் பின்தான் பறையும், பம்பையும், உருமியும், தவிலும், கொட்டும், நாயனமும் என எண்ணிலடங்கா நாட்டாரிசைக் கருவிகள் இசைப் பதிவுக் கூடங்களுக்குள் நுழைந்தன. அதுவரை இருந்த இசைத் தீண்டாமையை ஒற்றை ஆளாய் அடித்துநொறுக்கி புறம்தள்ளினார். இதை, ஒரு கலக நடவடிக்கையாகவோ, இப்படித்தான் செய்யவேண்டும் என்றோ தன்முனைப்புடன் செய்ததில்லை. அதற்குத் தேவையுமில்லை. ஏனெனில், அவரே கலகமாகத்தான் இருக்கிறார்.

இது இப்படித்தான் என்றால், ஏன் அப்படி? என்று கேட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்வதில் இவருக்கிருந்த முனைப்புபோல், இந்தியத் திரையிசை வரலாற்றில் எந்த இசைக் கலைஞனுக்கும் இருந்ததில்லை. நாட்டாரிசை என்று நாம் வகைப்படுத்திப் புரிந்துகொண்டாலும் அவர் அப்படியெல்லாம் வகைப்படுத்தாமல் நாட்டாரிசையில் செவ்வியலையும், செவ்வியல் இசைக் கருவிகளையும் பயன்படுத்தினார். செவ்வியலில் நாட்டாரிசையை வைக்கவும் செய்தார். இப்படிச் செய்ததால்தான் இன்றளவும் அவரது எந்த இசைக்கோலத்தைக் கேட்டாலும் அதில், புதிதாக ஏதோ ஒன்றைச் செய்துவைத்து நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.

எந்த இசை வடிவத்தையும் உள்வாங்கிச் செரித்து ‘இளையராஜா வடிவம்’ என்று வழங்கும், ரசவாதத்தை பிடிவாதமாகச் செய்துகொண்டிருப்பதால் சில இழப்புகளும் நேர்ந்திருக்கின்றன. 90களில் ராயல் ஃபில்ஹார்மனிக் ஆர்க்கெஸ்ட்ராவால் ஒரு சிம்பனி அமைக்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட போது, இங்கிருந்து நாதஸ்வரக் கலைஞர்களையும், தாளக்கருவிக் கலைஞர்களையும் அழைத்துச் செல்கிறார். அந்த இசையை ஒருங்கிணைத்த இசை நடத்துநர் ஜான் ஸ்காட் சொல்கிறார்: “இப்படி ஒரு சிம்பனி இசையை இதற்குமுன் கேட்டதில்லை” என்றும், ‘‘தமக்கு படைப்பூக்கத் தடை நிகழும்போதெல்லாம் ராஜாவின் சிம்பனியைக் கேட்டு, புதிய திசைகளைக் கண்டடைகிறேன்’’ என்று சொல்கிறார்.

ஆனால், மரபை மீறிவிட்டதாக மரபில் ஊறிய சிம்பனி இசைக் கலைஞர்களின் மற்றும் இசை விமர்சகர்களின் மறுப்பால் அந்த இசைக்கோலத்தை வெளியிடாமலேயே வைத்துக்கொள்ளவேண்டி வந்தது. இருக்கட்டும். மொஸார்ட்டும், பீத்தோவனும்கூட அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி மரபை மீறியவர்கள் எனப் பெயர் வாங்கியவர்கள்தான். அவர்கள் செய்த புரட்சியையே அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் மரபாக்கி, கட்டுப்பெட்டித்தனமாக இறுகிய பின் தமிழகத்தின் தென்கோடி மூலையிலிருந்து ஒரு கருப்பன் வந்து இதுவும் சிம்பனிதான் என்றால் சும்மா இருக்குமா என்ன வெள்ளைத் திமிர்!. ஆனால், ஸ்டிஃபன் ஸ்காவார்ட்ஷ் போன்ற சிலரும் அங்கு இருக்கிறார்கள். ராஜாவின் திருவாசகத்தைக் கேட்டுவிட்டு “A Stunning Blend of East and West” என்று புகழ, இதுதான் ராஜா. எந்த வடிவ ஒழுங்குக்கும் அடங்காதிருக்கும் திரவம்போல் இசை இழைக்கும் ஒரு படைப்பாளி. ஆற்றில் நிற்கும் ஒருவனுக்கு, ஆறு தம்மைக் கடப்பதை உணராமல் இருப்பதுபோல், இசை பயிலத் தொடங்கிய நாளில் இருந்த அதே ராஜாதான் இன்றும் இருப்பது. காலம்தான் கடந்திருக்கிறது. மக்களிடையே உண்டு, உறங்கி, இசைத்து தொடங்கிய அந்த பால்யம்தான் அவரிடம் இருப்பது. அதனால்தான் அவரால், மக்களின் ஆன்மாவை ஊடுருவும் இசையை அள்ளி வழங்கமுடிகிறது. தமது இசையைத்தான் அவர் இசைத்துக் கொண்டிருக்கிறார் என்பதால்தான் மக்களும், அவர் இசையிலிருந்து மீளமுடியாச் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். நம்மிடமிருந்தே நாம் எப்படி மீள்வது?.

இந்தப் பின்னணியில்தான், இளையராஜாவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் தேசிய விருது முக்கியத்துவம் அடைகிறது. அவருக்கு விருதுகளெல்லாம் ஒரு பொருட்டல்ல என்றாலும், அவருக்கு விருதுகள் தருவதால் அவ்விருதுகளின் மதிப்புதான் கூடுகிறது என்றாலும், தமிழ் மக்கள் இசைக்கு இது பெருமைசேர்க்கும் ஒரு விஷயம். பொதுவாக, இந்தியத் திரைவிருதுகள் இசையைப் பொருத்தவரை தொடக்கத்திலிருந்தே செவ்வியல் அல்லது செவ்வியல்தன்மை வாய்ந்த இசை வடிவங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக 1990 வரை. அதற்குமுன், இளையராஜாவுக்குக் கிடைத்த மூன்று விருதுகளுமே முறையே சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ரவீணா என, கர்நாடக செவ்வியல் இசை வடிவங்களுக்குக் கிடைத்ததாகும். இந்திய செவ்வியல் அல்லாமலும் சில இசையமைப்பாளர்களுக்கு மேற்கத்திய செவ்வியல் வடிவங்களில் இசை அமைத்ததற்கு இவ்விருதுகள் கிட்டியுள்ளன. மிகவும் கறாராக அங்கு நாட்டாரிசை, பரப்பிசை போன்ற மக்கள் இசை வடிவங்களுக்கு அனுமதி கிடையாது. அதில், ஒரு உடைப்பை நிகழ்த்தியது 1990ல் புபேன் ஹசாரிக்காவின் லேக்கினுக்கும், பின் 1992ல் ரகுமானின் ரோஜாவுக்கும் கிடைத்த தேசிய விருதுகளாகும். தேவர்மகனுக்கு கிடைக்கவேண்டிய விருது இயக்குநர் பாலுமகேந்திராவின் ஒற்றை ஓட்டால் ரோஜாவுக்கு கிடைத்திருக்காவிட்டால் அன்றே தேசிய அளவில் மேற்கத்திய செவ்வியலோடு முயங்கும் தமிழ் நாட்டாரிசைக்கும் கவனம் கிடைத்திருக்கும்தான். பரவாயில்லை. மாறிவரும் உலகமயமாக்க பொருளாதாரச் சூழலுக்கு கட்டியம் கூறுவதாக இருந்தாலும், அதற்குமுன் கேட்டிரா துல்லியத்தோடும், நவீன ஒலிகளோடும், உலகத் தரத்தோடும், இந்தியாவையே மயக்கிய பரப்பிசைக்கு விருது கிடைத்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அதன்பின் பரப்பிசை, செவ்வியல் இசை என்று மாறி மாறி விருதுகள் வழங்கப்பட்டன, ஆயினும் நாட்டாரிசை விளிம்பில்தான் இருந்தது. 2001ல் மீண்டும் ஒரு உடைப்பை நிகழ்த்தியது ரகுமானின் லகான். வடமேற்கு இந்திய மக்களின் மண்ணிசையும், மேற்கத்திய செவ்வியலும் குழைந்து ஒரு அற்புதம் நிகழ்ந்தபோது எதிர் கேள்வியில்லாமல் விருது வழங்கப்பட்டது. அடுத்துவந்த காலங்களில் செவ்வியல், பரப்பிசை, நாட்டாரிசை என, எந்தப் பாகுபாடும் இல்லாமல் திரைப்படமும், இசையும் இயைந்து இருந்தால் அத்திரையிசை திரைப்படத்தின் உள்ளுணர்வுகளைச் சரியாக பார்வையாளர்களுக்குக் கடத்தியிருந்தால் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வரிசையில், 2008ல் அஜய்-அதுல் இரட்டையர்களின் ஜோக்வா-வுக்குக் கிடைத்த விருது முதன்முறையாக, தனித்து நாட்டாரிசையை வெகுவாகக் கொண்டாடிய ஒரு படத்துக்குக் கிடைத்தது. தங்களை ஏகலைவர்களாகவும், இளையராஜாவை துரோணராகவும் கருதும் இந்தச் சீடர்கள், ராஜாவைப்போலவே மண்ணிசையைக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லைதான். 2009ல் பின்னணி இசைக்கென தனிப்பிரிவு உண்டாக்கப்பட்டு, முழுதும் மேற்கத்திய செவ்வியல் வடிவில் பின்னணி இசை அமைந்த இளையராஜாவின் பழசிராஜா-வுக்கு விருது வழங்கப்பட்டது. இது, இளையராஜாவை செவ்வியல் இசைக் கலைஞர் எனும் வட்டத்துக்குள்ளேயே அடைக்கப் பார்க்கிறார்களே என நினைக்கும்படி இருந்தது. ஏனெனில் அதேயாண்டு, பாடல்களுக்கான விருது மண்ணிசையையும், பரப்பிசையையும் கலந்தடித்த இசைக்கோர்வையான, அவ்வாண்டில் இளைஞர்களின் கொண்டாட்டமாக மாறிப்போன, அமித் திரிவேதி-யின் தேவ்.டி’க்கு கிடைத்தது. நல்லவேளை, அவர்கள் இளையராஜாவை அப்படியெல்லாம் பார்க்கவில்லை என்பதை, தமிழ் மக்களிசைக் கருவிகளான பறையும், பம்பையும், உருமியும், நாயனமும், அதிர முழங்கும் தாரை தப்பட்டையின் பின்னணி இசைக்குக் கிடைத்திருக்கும் விருது உறுதிசெய்கிறது. அன்னக்கிளி-க்கு கிடைக்கவேண்டியது சற்றே தாமதமாய் 40 ஆண்டுகளும், 1000 படங்களும் கடந்தபின் கிடைத்திருக்கிறது. அதனால் என்ன, அவர் இன்னமும் பண்ணைப்புரத்தின் தெருக்களில், குழல் இசைத்துப் பயிலும் ராசய்யாவாக அந்தக் காலத்திலும்தானே இருக்கிறார்..�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *