“இந்திரா காந்தியின் நினைவு நாளை மறைக்கவே, படேலின் பிறந்தநாள் விழாவை பாஜக கொண்டாடுகிறது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 34ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதுபோலவே மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் இந்திரா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிதாக அமைந்துள்ள படேலின் சிலையை குஜராத்தின் இன்று (அக்டோபர் 31) பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
புதுவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, படேல் சிலை திறப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பேசுகையில், “தற்போது பாஜக ஆட்சியில் இருக்கலாம், பிரதமராக மோடி இருக்கலாம். ஆனால் காங்கிரஸை விட்டுவிட்டு நாட்டின் சரித்திரத்தை யாரும் எழுத முடியாது. இந்திரா காந்தியின் நினைவு நாளை மூடிமறைப்பதற்காக பட்டேல் பிறந்த நாள் விழாவை பாஜக கையிலெடுத்துள்ளது. ஆனால் படேல்தான் பாஜகவின் முன்னோடியான ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த தலைவர். அவருக்குத்தான் இன்று பாஜக விழா கொண்டாடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.�,