இந்தியாவின் ஓலா டாக்ஸி நிறுவனம் இங்கிலாந்திலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
ஓலா, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் தனது சேவையைத் தொடங்கிய ஓலா, இப்போது இங்கிலாந்திலும் தடம் பதித்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள கார்டிஃப், நியூபோர்ட் மற்றும் வேல் ஆஃப் கிளாமோர்கன் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதற்கட்டமாகத் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சவுத் வேல்ஸ் பகுதியில் தனியார் டாக்ஸிகளை ஒரு செயலி அல்லது ஒரு தளத்தின் வாயிலாக இணைக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஓலா பெற்றுள்ளது.
இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவு நிர்வாக இயக்குநரான பென் லேக், *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஓட்டுநர்கள் மத்தியில் ஓலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்குள்ள பயணிகளுக்குத் தலைசிறந்த மற்றும் மாறுபட்ட போக்குவரத்துச் சேவையை வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் சேவை வழங்குவதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது. 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் சேவையை விரிவாக்கம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஓலா சேவை வழங்கும் இரண்டாவது நாடு இங்கிலாந்தாகும். முன்னதாக ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்திருந்தது. அங்கு சுமார் 40,000 ஓட்டுநர்கள் ஓலாவுடன் பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.�,