நீட் தேர்வினால் தனது டாக்டர் கனவு நிறைவேறாததால், மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மாநிலப் பாடத்திட்டத்தின்படி மருத்துவம் படிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட மாணவியான அனிதாவின் டாக்டர் கனவு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வினால் தகர்ந்து போனது. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். இதில் எதிர் மனுதாரராக தன்னை இணைத்துக்கொண்ட அனிதா, ‘நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறி போய்விடும்’ என்று மனு அளித்தார். ஆனால் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் கனவு பறி போனதால் மனமுடைந்த மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்குக் காரணமான நீட் தேர்வுக்கு விலக்களிக்காத மத்திய அரசையும், பெற்றுத்தராத மாநில அரசையும் கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே அனிதாவின் தற்கொலையால் கடும் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செந்துறை திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சென்னை, அண்ணா சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இறந்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் மன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதையடுத்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் விலக்களிக்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். திருநெல்வேலியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நீட் தேர்வில் விலக்கு பெற தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயக்குநர் கவுதமன், தமிழகம் முழுவதும் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று கடையடைப்பு நடைபெறவுள்ளது.
�,