�
ஃபேஸ்புக்கின் இந்தியத் தலைவராக கிர்த்திகா ரெட்டி என்பவர் இருந்தார். அந்நிறுவனத்தின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் ட்ராய் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் இந்தியத் தலைவர் பதவியிலிருந்து கிர்த்திகா ரெட்டி நீக்கப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார் என்ற செய்தி வெளியானது. அதற்குக் காரணம், ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்துக்கு அனுமதி கிடைக்காததே என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், ஃபேஸ்புக் தரப்பிலிருந்து கிர்த்திகா ரெட்டி மாற்றப்பட்டதற்கு ஃப்ரீ பேசிக்ஸ் விவகாரம் காரணமல்ல என்று பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவராக உமங் பேடி என்பவரை நியமித்துள்ளனர். இதற்குமுன்பு, அடோப் நிறுவனத்தில் தெற்காசியப் பிராந்தியத்தின் தலைவராக இருந்த இவர், ஜூலை மாதம் ஃபேஸ்புக்கில் இணையவுள்ளார். கிர்த்திகா ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்கா செல்கிறார். இலவச இணையதிட்டம் குறித்து மக்களின் கருத்துக் கேட்டு, சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது ட்ராய் நிறுவனம். இதற்கும் ஃபேஸ்புக்கின் புதிய தலைவர் மாற்றம் என்ற செய்திக்கும் தொடர்பு ஏதேனும் இருக்கிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.�,