குழந்தைகள் காப்பகங்களுக்கு அளிக்கும் நிதி: மத்திய அரசுக்குக் கேள்வி!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி எவ்வளவு என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 21) கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஜூன் 11ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில், எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜூலை 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது . அதில், ராயபுரம் காப்பகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 குழந்தைகளும் குணமடைந்துவிட்டனர். தற்போது, காப்பகத்தில் உள்ள எந்த ஒரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குழந்தைகள் காப்பகங்கள் விவகாரம் தொடர்பாகப் பதில் மனுத் தாக்கல் செய்யாத, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட, திரிபுரா உட்பட அனைத்து மாநிலங்களும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு வழக்கறிஞர் கவுரவ அகர்வால் நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கு மீண்டும் இன்று, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் மாநில அரசுகள் குழந்தைகள் காப்பகங்களைப் பராமரிப்பது, நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய வழக்கறிஞர் கவுரவ அகர்வாலுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர், சீனிவாசன், தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் தொலைக்காட்சி வசதி உள்ளது. ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுதோறும் ரூ.5.5 லட்சம் வீதம் மாநில அரசால் நிதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் சேவை, இணைய வழிக் கல்விக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

**கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share