மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த, பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் பெயரில் ரூ.1,000 வைப்புத்தொகையும், குலுக்கல் முறையில் பெற்றோருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த அரசும், ஆசிரியர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது, 2021–2022 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர், தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசுகள், சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, புதிதாக சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சலகத்தில் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என்றும், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் ரூ.10,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதையடுத்து, புதிதாக 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அறிவித்தப்படி, மாணவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் பணம் செலுத்தப்பட்டு, அதற்கான வைப்பு கணக்கு புத்தகம் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்களும், சேதபக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் குறிய கருத்துகள், பொது அறிவுகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் கவனத்தை அரசுப் பள்ளியின் பக்கம் திருப்புவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதுபோன்று பல இடங்களிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”