vசூரப்பா: இறுதி முடிவு எடுக்க அரசுக்குத் தடை!

Published On:

| By Balaji

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி சூரப்பா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால் தான் துணைவேந்தருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு, சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. விசாரணையை சந்திக்க அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும். விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு, சுமூக தீர்வு காண அறிவுறுத்தி, விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார். மனுவுக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.

**வினிதா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share