ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்!

Published On:

| By Balaji

ஆன்லைன் ரம்மி விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்துவதால் தற்போது இளைஞர்கள் பலர் அதனை விளையாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனியார் தோட்டத்தில் நானும் என் நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கூடங்குளம் போலீசார் என் மீதும் என் நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பொது இடத்தில் சீட்டு விளையாடினால் தான் குற்றம். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்தது போல ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52 போன்ற இணைய விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்கள் இணையதளங்களில் அதிகளவு தோன்றுகின்றன. குறிப்பாக, இந்த விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து விளம்பரப்படுத்தப்படுகிறது.

வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் இது கெடுக்கிறது. இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி படித்த இளைஞர்களின் பணமும் இந்த விளையாட்டால் பறிபோகிறது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரியச் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தெலங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் போது நீதிபதி சுட்டிக்காட்டினார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share