கடவுளை ஆஜர்படுத்த உத்தரவு: உயர் நீதிமன்றம் கண்டனம்!

Published On:

| By Balaji

சிலைக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட சிலையை ஆய்வுசெய்வதற்காக கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சுவாமி கோயிலில் இருந்த மூலவர் சிலை கடத்தப்பட்டிருந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்த சிலையை மீட்டு, கும்பகோணம் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த சிலை, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் பீடத்தில் நிறுவப்பட்டது. இதற்கிடையில் வழக்கு விசாரணையின் போது, ஆய்வு செய்வதற்காக சிலையை ஆஜர்படுத்தும்படி, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், சிலையை பீடத்தில் இருந்து எடுக்க கோயில் செயல் அலுவலர் முயன்றுள்ளார்.

கோயில் சிலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதை எதிர்த்து சிவிரிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இன்று(ஜனவரி 7) நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். அப்போது, சிலையை கடவுளாக மக்கள் நம்பும் நிலையில், நீதிமன்றம் கடவுளை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட முடியாது என்று கூறி, அதனை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சிலையை ஆய்வுசெய்ய வேண்டுமானால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வுசெய்ய வேண்டும் எனவும், சிலையை பீடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share