துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்துத் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் கூறவில்லை, அவர் மீது எனக்கு மரியாதை உண்டு என தனது பேச்சுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டம் நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது. இதில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, ”சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். பல்கலைக்கழக அரங்கத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம், அந்த பணிகள் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று மேற்பார்வையிட சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் என்னிடம் வந்து கூறினார். அப்போது நான் அவரிடம் பேசியதையெல்லாம் வெளியே சொல்லவே முடியாது. நான், நீங்களெல்லாம் ஆம்பளையா என்று அவரிடம் கேட்டேன். பிறகு, அந்த அம்மா சமாதிக்குச் சென்று அமருங்கள். வழி பிறக்கும் என்றேன்” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஓ.பி.எஸிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார்.
இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூறக் காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயலலிதாவை ஆதரித்த துக்ளக், அவரே ஏற்ற சசிகலாவை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ.பன்னீர் செல்வத்தின் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதைத் திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பன்னீர்செல்வம் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ குருமூர்த்தியின் பேச்சு ஆணவம், திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; பொதுவாக நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு. அது அனைவருக்கும் தெரியும்” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
�,