Q2 குழந்தைகளைக் கொன்ற தாய் கைது!

Published On:

| By Balaji

சென்னையை அடுத்த குன்றத்தூரில் பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொலை செய்த தாய், இன்று நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசித்துவரும் விஜய், தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு விஜய் வீட்டுக்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கினார். நேற்று (செப்டம்பர் 1) அதிகாலை வீட்டுக்கு வந்த விஜய், வீட்டின் கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்ததைக் கண்டு விஜய் சத்தம் போட்டுக் கதறினார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையைத் தொடங்கினர் காவல் துறையினர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், விசாரணையில் தெரியவந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அபிராமி தலைமறைவானதால், அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தைகளுக்கு அவர் பாலில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போலீஸார், அவரை இன்று (செப்டம்பர் 2) காலை நாகர்கோவிலில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால், இந்தக் கொடூரத்தை அவர் நிகழ்த்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share