ஸ்பைடர் படத்தின் தோல்விக்கான காரணத்தை விளக்கியிருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு.
தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபு ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக மகேஷ் பாபு நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
இந்தப் படம் குறித்து பலவாறு விமர்சனங்கள் எழுந்தபோது கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த மகேஷ் பாபு, தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
“ஸ்பைடர் படம் நடித்து முடித்து ரிலீஸ் செய்த பின்னர் தான் சில தவறுகள் செய்திருந்ததை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அந்தத் தவறுகளைச் சரிசெய்ய எந்த வாய்ப்புமே அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால், தவறுகளை நிச்சயமாக உணர்ந்தோம். தமிழில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை அப்படியே தெலுங்கு மொழிக்கு எடுத்துச் சென்றோம். அந்தச் சமயத்தில் தெலுங்கு ரசிகர்களின் எண்ண ஓட்டத்துக்கேற்ப படத்தில் சில மாற்றங்களைச் செய்ய தவறி விட்டோம். அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். இனி, இதுபோன்ற ஒரு தவற்றை என் வாழ்நாளில் செய்யக் கூடாது என்றும், ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்றும் முடிவு எடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
மகேஷ் பாபு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘பாரத் அனி நேனு’ என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.�,