இந்திய நிறுவனங்கள் கடந்த 2016-17 நிதியாண்டில் தங்களது தொழில் மேம்பாட்டுக்காக பெருநிறுவனப் பத்திரங்கள் மூலமாக ரூ.7 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன. இது முந்தைய 2015-16 நிதியாண்டில் திரட்டப்பட்ட நிதியைவிட 43 சதவிகிதம் கூடுதலாகும்.
இந்த நிதி அனைத்தும் நிறுவனங்களின் தொழிற்துறை திட்டங்களை விரிவுபடுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்துவது மற்றும், மூலதனத் தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகிய பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 2015-16 நிதியாண்டில் ரூ.4,92,157 கோடி நிதி திரட்டப்பட்டிருந்த நிலையில், 2016-17 நிதியாண்டில் 43 சதவிகித உயர்வுடன் ரூ.7,03,505 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2001-02 நிதியாண்டுக்குப் பிறகு நிறுவனங்கள் திரட்டும் அதிகபட்ச நிதியாகும்.
கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட மொத்த நிதியில், தனியார் நிறுவனங்கள் ரூ.4.24 லட்சம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2.8 லட்சம் கோடியும் திரட்டியுள்ளன. துறை வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக நிதி சேவைகள் துறை ரூ.3.46 லட்சம் கோடி திரட்டியுள்ளது. இது மொத்த நிதியில் 49 சதவிகிதமாகும். அதைத் தொடர்ந்து மின்சாரத் துறையில் ரூ.1,14,775 கோடி திரட்டப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வாரியாகப் பார்த்தோமேயானால், ஹெச்.டி.எஃப்.சி. ரூ.44,546 கோடியும், பி.எஃப்.சி. நிறுவனம் ரூ.41,115 கோடியும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.33,118 கோடியும், எல்.ஐ.சி. ஹவுசிங் ரூ.26,874 கோடியும் மற்றும் ஆர்.இ.சி. நிறுவனம் ரூ.21,797 கோடியும் திரட்டியுள்ளன.�,