சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் பெண் அரிவாளால் தாக்கப்பட்டதையடுத்து, இன்று அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு.
நேற்று (ஜூன் 14) இரவு சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் தேன்மொழி என்பவரை அரிவாளால் வெட்டினார் சுரேந்திரன் என்ற நபர். ரயில்நிலையத்தில் இருந்தவர்கள் அதைப் பார்த்து கூச்சலிடவே, அவ்வழியாக வந்த ரயில் முன் அவர் பாய்ந்தார். இதில் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய தேன்மொழி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுரேந்திரன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவக் குழுவினர்.
தேன்மொழியும் சுரேந்தரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேன்மொழி சேத்துப்பட்டிலுள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இன்று சேத்துபட்டு ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு. அதோடு, சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியையும் நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சைலேந்திரபாபு, தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்தார். ”விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” என்று உறுதியளித்தார்.�,