qரயிலில் இனி பெயர்ப் பட்டியல் ஒட்டப்படாது!

Published On:

| By Balaji

ரயில் பெட்டிகளில் பெயர்ப் பட்டியல் ஓட்டும் வழக்கம், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கம் முதல், இனிமேல் ரயில்களில் பெயர்ப் பட்டியல் ஒட்டப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம். காகிதத் தயாரிப்பிற்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரயில்வே நடைமேடைகளில் வைக்கப்படும் பெயர்ப் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் தினமும் 11 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் இணையத்தின் மூலமாகப் பதிவு செய்யப்பட்டுகின்றன. இது கிட்டத்தட்ட 70 சதவிகிதம். இதனைக் கருத்தில் கொண்டே, பெயர்ப் பட்டியல் ஒட்டும் வழக்கத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே அமைச்சகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி, ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பெயர்ப் பட்டியலை ஒட்டாமல் இருப்பதென முடிவு செய்யப்பட்டது. 6 மாத காலச் சோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், ஹௌரா, சீல்டா ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் ரயில்களில் தற்போது பெயர் பட்டியல் ஒட்டப்படுவதில்லை.

காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், கடந்த 2016 நவம்பர் மாதம் முதல் பெங்களூரு, யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share