நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்று கூறியிருப்பது அவருடைய கொள்கை என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன் ஏற்பாட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று (பிப்ரவரி 17) சென்னையில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். அப்போது ரஜினி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. தேர்தலில் மக்களைச் சந்தித்து அதன்மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நன்மை செய்வதுதான் அதிமுகவின் கொள்கை. எம்ஜிஆர் காலத்திலிருந்து அதைத்தான் செய்து வருகிறோம். அதேபோல ரஜினி அவருடைய கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
மேலும், பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேர்தல் அறிக்கைக் குழு, கூட்டணி குறித்து பேசும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரவர் பணியை அவரவர் செய்து வருகிறார்கள். தலைவர்கள் சந்திப்பை வைத்து கூட்டணி என்று யாரும் உறுதிப்படுத்த முடியாது. கூட்டணி என்று வருகிறபோது நிச்சயமாக அதற்கான அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைமை வெளியிடும் அறிவிப்பை மட்டும்தான் உறுதியானதாக எடுத்துக்கொள்ள முடியும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். திமுக – அதிமுகவுக்கு மட்டும்தான் போட்டியே தவிர வேறு யாருக்கும் இல்லை” என்றார்.
அதிமுக யாருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது தொடர்பான வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால், பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க காய் நகர்த்தி வருவது பியூஷ் கோயலின் தமிழக வருகை மூலம் உறுதியாகியுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பியூஷ் கோயல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக குறைந்தபட்சமாக 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால், பாஜக எதிர்பார்க்கும் இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதே பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமை பெறாததற்கு காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பியூஷ் கோயல் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக மீண்டும் விரைவில் சென்னை வரவுள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்து பிப்ரவரி 25ஆம் தேதி அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.�,